close
Choose your channels

wifi முதல் ஜவுளிப்பூங்கா வரை அமைக்கப்படும் ...!  மதுரையில் பிரதமர் மோடி வாக்குறுதி...!

Friday, April 2, 2021 • தமிழ் Comments

மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய பாரத பிரதமர் மோடி அவர்கள், 2024-க்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படும் என்று வாக்குறுதி தந்துள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித்தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக-அதிமுக கூட்டணியை ஆதரிக்கும் பொருட்டு பாரத பிரதமர் மதுரை பொதுக்கூட்டத்தில் இன்று உரையாற்றினார். வெற்றிவேல்,வீரவேல் என்ற வசனத்துடன் பேச்சை துவங்கிய மோடி, மக்களைப் பார்த்து ''நல்லா இருக்கீங்களா, மதுரை வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி" என்று தமிழில் கூறி உற்சாகமாக உரையாடலை துவங்கினார்.

'வீர மண்ணாகவும், புண்ணிய பூமியாகவும் மதுரை விளங்குகிறது. இம்மானுவேல் சேகரன், வீர பாண்டிய கட்டபொம்மன், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை நினைவு கூர்ந்து, முத்துராமலிங்க தேவருக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறேன். தமிழுக்கு சங்கம் வைத்து வளர்த்த பெருமை கொண்ட ஊர், இது. பல சமுதாய மக்கள் வாழும் இம்மண் கலாச்சாரத்தின் மையமாகவும் விளங்கி வருகிறது.

மதுரை-கொல்லம் இடையே வழித்தடங்கள் அமைக்கப்பட்டால் தான், தொழில்துறையும் மேம்பட வாய்ப்புள்ளது. மதுரை போன்ற முக்கிய நகரங்களை சாலை,விமானம்,ரயில் துறை போன்ற போக்குவரத்துக்களை கொண்டு வந்து பிற நகரங்களுடன் இணைக்கிறோம்.

நம் நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை சரிசெய்யும் நோக்கில், ரூ.100 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மாவட்டங்களை தொழில்ரீதியாக உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீர் வேளாண்மையில் கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு, 2024-க்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுசெல்ல திட்டம் கொண்டுவரப்படும். சுமார் 16 லட்சம் வீடுகளுக்கு தமிழகத்தில் தண்ணீர் கொண்டு செல்லும் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. "ஜல் ஜீவன்" திட்டத்தின் வழியாக மதுரையில் உள்ள மக்களின் வீடுகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும், மேலும் வைகை ஆற்றில் அனைத்து நாட்களும் நீர் ஓடுமாறு செய்யவைக்க இயலும். தமிழகத்தில் தொழிற்சாலைகள் கொண்டுவரவும், மாநிலத்தின் தெற்குப்பகுதிகளில் உணவு பதப்படுத்தும் தொழில்கள் கொண்டுவரப்படும்.
நாடு முழுவதும் wi-fi சேவையும், தமிழ்நாட்டில் 7 ஜவுளிப்பூங்காக்களும் அமைக்கப்படும். இவை அனைத்தும் நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்தால் மட்டுமே கொண்டு வர இயலும். மதுரையில் சர்வதேச தரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுவதற்கு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஆனால் காங்கிரஸ்-திமுக கூட்டணி இதுபற்றி நினைத்து கூட பார்க்கவில்லை. இவர்கள் தமிழகத்தை பாதுகாப்பது போல் சித்தரித்துக் கொள்கிறார்கள். பெண்களுக்கு அதிகாரம் வழங்க நடவடிக்கைகளையும், தேவேந்திர குல மக்களின் நலனை மீட்டெடுத்தும் மத்திய அரசு தான்" என்று உரையில் பேசியுள்ளார்.


 

Get Breaking News Alerts From IndiaGlitz