close
Choose your channels

அஜித் கோவப்பட்டது ஏன்? விரிவான தகவல்

Tuesday, April 6, 2021 • தமிழ் Comments

தல அஜித் இன்று திருவான்மியூர் வாக்குப்பதிவு மையத்தில் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அஜீத் வாக்களிக்க வந்த போது அவருடைய ரசிகர்கள் பலர் முண்டியடித்துக்கொண்டு செல்பி எடுக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

ஒரு ரசிகர் அஜித்தின் அருகில் வந்து செல்பி எடுத்த போது அந்த செல்போனை அவர் பிடுங்கிக் கொண்ட காட்சியும் வீடியோவில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அஜித் வாக்களித்து முடித்தபின் அந்த ரசிகரை அழைத்து அவரிடம் செல்போனை திருப்பிக் கொடுத்துவிட்டு ஜனநாயக கடமையை ஆற்ற வரும்போது பொது இடத்தில் இவ்வாறு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று அறிவுரை கூறினார்

மேலும் நீங்கள் ஓட்டு போட்டு விட்டீர்களா? என அந்த ரசிகருடன் அஜித் கேட்டபோது இன்னும் இல்லை அந்த ரசிகர் கூறினார். இதனை அடுத்து ’முதலில் நீங்கள் உங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றுங்கள்’ என்று அறிவுறுத்தினார்

ஓட்டு போட வந்த இடத்தில் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க முயன்றதை அடுத்தே அஜித் கோபமாக நடந்து கொண்டாலும், சில நிமிடங்களில் அவர் அந்த கோபத்தை மறந்து அதே ரசிகரிடம் அன்பாக பேசி அறிவுரை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz