பிரதமர்-தமிழக முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார். இந்தப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சில முக்கியக் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் சந்திப்பின்போது என்ன நடந்தது என்பது குறித்த விளக்கத்தை செய்தியாளர்களிடம் அளித்து உள்ளார்.
அதில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திறந்து வைப்பதற்கும் புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்கும் பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்து உள்ளார். மேலும் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்றும் தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடந்தது என்றும் விளக்கம் அளித்து உள்ளார். மேலும் தொடர் மழையால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் நிவாரண நிதி குறித்துப் பேசப்பட்டதாகவும் தகவல் தெரிவித்து உள்ளார்.
அதோடு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 40 பேர் விடுதலை செய்யப்பட்டு இருப்பதாகவும் மற்றவர்கள் அடுத்த சில நாட்களில் விடுதலை செய்யபடுவார்கள் என எதிர்ப்பார்க்கப் படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.