close
Choose your channels

அப்படி என்ன சாதித்து விட்டார் கலைஞர்?

Thursday, June 3, 2021 • தமிழ் Comments

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 98 ஆவது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் விமர்சையாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நாளில் அவருடைய அரசியல் நிலைப்பாட்டைக் குறித்துப் பலரும் பேசி வருகின்றனர். அந்த வகையில் அவர் ஒரு நல்ல அரசியல்வாதியா? அல்லது சமூக நீதி பேசியவரா? அல்லது கொள்கைவாதியா? என்றும் அலசப்படுகிறது. இந்த கேள்விக்கான விடையை அவருடைய செயலில் இருந்து புரிந்து கொள்வதுதான் சரி. இதுகுறித்த ஒரு தொகுப்பு.

இந்தியாவிலேயே முதல் முதலாகப் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் சமப்பங்கு உரிமை அளிக்கும் சொத்துரிமைச் சட்டத்தை 1989 இல் கொண்டு வந்தவர் கலைஞர். முன்னதாக அம்பேத்கரால் கொண்டு வரப்பட்ட பெண்கள் சொத்துரிமை மசோதா கடந்த 1956 இல் தோற்கடிக்கப்பட்டது. அதை பின்னால் வந்த கலைஞர் நடைமுறைப் படுத்தினார்.

பெண்கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் உதவித்தொகைத் திட்டம் கொண்டு வந்து கிராமப்புற பெண்களின் கல்விக்கு வழிகோலினார். 1975 இல் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மகளிர் மறுமண நிதி உதவித் திட்டத்தை கொண்டு வந்தவர். கலப்பு திருமண நிதியுதவித் திட்டத்தைக் கொண்டு வந்தவர். ஆதரவற்ற பெண்களுக்கான நிதியுதவித் திட்டத்தை கொண்டு வந்தவர்.

1973 இல் இந்தியாவில் முதல் முறையாக காவல் துறையில் பெண்களை பணி நியமனம் செய்தார்.

1990 இல் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு முறையை சட்டமாக்கியவர்.

1996 இல் இந்தியாவிலேயே முதல் முறையாக உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கினார்.

கிராமப்புறப் பெண்கள் தங்களது சொந்தக் காலில் நிற்க மகளிர் சுய உதவிக்குழுக்களை கலைஞரே கொண்டு வந்தார். கலைஞர் இலவச டிவி கொடுத்து அடித்தட்டு மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க வழி செய்தார்.

குடிசை மாற்று வாரியம் அமைத்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை எளியவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்தார். தனக்கு பின்னால் வந்த அரசாங்கத்தையும் இதுபோல செய்ய காரணமாக இருந்தவரும் கலைஞரே.

ஜப்பான் நாட்டு உதவியோடு தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தார்.

ஆசியாவின் மிகப்பெரிய கிளவர் இலை வடிவ மேம்பாலமான கத்திப்பாரா உட்பட பெரும்பாலான மேம்பாலங்களை கலைஞர்தான் உருவாக்கினார்.

கடல் நீர் குடிநீராக்கும் திட்டம் அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், கரூர் மாவட்டம் மாயனூரில் அணை கட்டி காவிரி குண்டாறு நதி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தினார்.

1989 இல் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தைக் கொண்டு வந்தவர் கலைஞர்.

1989 இல் விவசாயத்திற்காக இலவச மின்சாரம் வழங்கி விவசாயிகளின் சுமையைப் பெருமளவு குறைத்தார். கோலப்பன் குழுவின் பரிந்துரையை ஏற்று விவசாய தொழிலாளர் நலவாரியம் அமைத்தார்.

2006 ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்றபோது விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி கடனை விழா மேடையிலேயே ரத்து செய்தவர் கலைஞர்.

1,79,000 நிலமற்ற ஏழைகளுக்கு நிலம். 162 உழவர் சந்தைகள் திறப்பு. விவாசயத்திற்கு என தனியாக வேளாண் பல்கலைக்கழகம் திறப்பு. நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வந்து நிலமில்லாத ஏழைகளுக்கு வழங்கினார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இவரது ஆட்சியில் கொண்டுவரப்பட்டதுதான்.

மாவட்டம்தோறும் தலைமை மருத்துவமனைகள், தாலுகா அரசு மருத்துவமனைகளை கொண்டு வந்ததும் கலைஞரே. 3,000 க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்களை உருவாக்கினார். ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 24 மணிநேர சேவையை கொண்டு வந்தவர் கலைஞர்.

108 ஆம்புலன்ஸ் சேவையை இந்தியாவில் முதல் முதலாக அறிமுகப்படுத்தியவர் கலைஞர். கலைஞர் காப்பீட்டு திட்டம் எனும் மகத்தான சேவையும் செய்து கொடுத்தார். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியும் எனும் திட்டம் இவரது ஆட்சியில் அமைக்கப்பட்டது.

உருதுபேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இணைத்தார். அவர்களுக்கு 3.5% இடஒதுக்கீட்டையும் கொண்டு வந்தார். உருது அகாடமியை உருவாக்கியதோடு 2007 இல் சிறுபான்மையினர் நல இயக்குநரகத்தையும் செயல்படுத்தினார்.

1970 இல் உலகத்தரம் வாய்ந்த சேலம் உருக்காலையை பல போட்டிகளுக்கு இடையில் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். 1970- சிட்கோ அரசு நிறுவனம், 1971-சிப்காட் எனப்படும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தையும் அமைத்தார்.

பூம்புகார் கப்பல் போக்குவரத்தை நிறுவியவரும் இவரே. சென்னை, திருச்சி, கோவை என இந்தியாவிலே முதல் முறையாக டைடல் பார்க்கை கொண்டு வந்தவர் கலைஞர்.

இடஒதுக்கீடு- பிற்படுத்தப்பட்டோருக்கு 3.1% ஆகவும், தாழ்த்தப்பட்டோருக்கு 18% ஆகவும் இட ஒதுக்கீட்டை உயர்த்தியவர் கலைஞர். பழங்குடியினருக்கு 1%, அருந்ததியினருக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18%-இல் இருந்து 3% உள் இடஒதுக்கீட்டை பகுத்துக் கொடுத்தார். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர்.

பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் அமைத்தவர். சாதிப்பாகுபாடுகளை நீக்கும் வகையில் நூற்றுக்கணக்கான சமத்துவப் புரங்களைக் கட்டினார். அனைத்துச் சாதினியரும் அர்ச்சகராகலாம் என்னும் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

ஆரியப் பெருமைக்கு எதிராக வள்ளுவத்தை தூக்கிப் பிடித்தவர் கலைஞர். நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம், கன்னியாக்குமரியில் 133 அடிக்கு திருவள்ளுவச் சிலை என வள்ளுவத்தின் பெருமையை அறியச் செய்தவர்.

தமிழுக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தி “செம்மொழி“ அந்தஸ்தை பெற்றுத்தந்தார். 1970 இல் தமிழ்த்தாய் பாடும் வழக்கத்தை கொண்டு வந்தார். தமிழ் ஆண்டுகளை வரிசைப்படுத்தி “திருவள்ளுவராண்டு“ முறையைக் கொண்டு வந்தார். சென்னையில் “செம்மொழி பூங்காவை“ உருவாக்கியர் கலைஞர். கோவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தியவர்.

10 ஆம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடமாக்கினார். தமிழ் வழியில் படித்தவர்கள் 20% இடஒதுக்கீடு அரசு பணிகளில் வழங்கினார். தை திருநாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தார்.

கல்வியில் தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, வருமான வரம்புக்கு உட்பட்டவர்களுக்கு இலவசக் கல்வி. 1996-2001 ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுக்க 7 ஆயிரம் பள்ளிகளை புதிதாகக் திறந்தார்.

ஆசியாவிலேயே முதல் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம் சென்னையில் தொடங்கினார். சட்டக்கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர், மாநிலக் கல்லூரிகளுக்கு பாரதியார், பாரதிதாசன், மனோன்மணியம் சுந்தரனார், அண்ணா பெயரில் பொறியியல் கல்லூரி என அறிஞர்களை தூக்கி கொண்டாடியவர் கலைஞர்.

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு உதவித்தொகை திட்டத்தைக் கொண்டு வந்தார்ர். பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தவர் கலைஞர். மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ், சத்துணவில் முட்டை, அண்ணா நூற்றாண்டு நூலகம் என இவரது சாதனைகள் நீண்டு கொண்டே போகிறது.

இறுதியாக இந்தத் திட்டங்கள் அனைத்தும் ஒருவேளை அரசியல் நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டு இருக்குமோ? என்ற சந்தேகம் எழலாம். ஆம் அப்படியும் நடந்து இருக்கலாம். ஆனால் கலைஞரின் கொண்டு வந்த அனைத்து திட்டங்களிலும் கடைசியில் சமூக நீதியே மேம்பட்டு இருந்தது. இதை பாமரனும் எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. இதனால்தான் கலைஞன் எனும் பிம்பம் இந்தியா முழுக்கவே சிறப்பாகப் பேசப்படுகிறது.

அரசியல் எனும் மேடையில் அமர்ந்து கொண்டு மிகச் சிறப்பாக சமூக நீதியைச் செயல்படுத்தியவர் கலைஞர். அம்பேத்கர், பெரியார் கண்டு வந்த கனவுகளுக்கு எல்லாம் உயிர்க் கொடுத்தவர். அந்த வகையில் மிகச் சிறந்த கொள்கைவாதியாக செயல்பட்ட கலைஞர் தனது கொள்கைகளை எதிர்க்கட்சியினரையும் பின்பற்ற வைத்தார். ஒரு நூற்றாண்டு வளர்ச்சியை கலைஞர் எனும் பிம்பத்தால் அடைந்த நாம் அவரை வாழ்த்துவதில் வியப்பேதும் இல்லை.

Get Breaking News Alerts From IndiaGlitz