விடாமுயற்சி: ரசிகர்களுக்கு விருந்து, ஆக்ஷன் விரும்பிகளுக்கு மருந்து…
லைகா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் , ரம்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் விடா முயற்சி.
அஜர்பைஜானில் நல்ல சம்பளத்துடன் மிகப்பெரிய வேலையில் இருக்கும் அர்ஜுன் (அஜித் குமார் ) . அவருக்கு மனைவியாக கயல் ( த்ரிஷா) . ஊரே மெச்சும்படி வாழும் கணவன் மனைவி. ஆனால் 12 வருடங்கள் கழித்து இருவரின் பந்தத்தில் விரிசலில். இந்த பிரிவு துவக்கத்திற்கு முன்பு கயலின் அப்பா அம்மா வீட்டிற்கு ஒரு பயணம் செல்லலாம் என முடிவெடுக்கிறார்கள். இந்த பயணத்தில் தான் எதிர்பாரா விதமாக ஒரு சிலரின் சந்திப்புகள் தொடர்ந்து கடத்தப்படும் கயல், கண்ணைக் கட்டி காட்டில் விட்டால் கூட பரவாயில்லை பாலைவனத்தில் அர்ஜுன் நிராயுதபாணியாக விடப்படுகிறார். தொடர்ந்து தனது மனைவியை கண்டுபிடித்தாரா இல்லையா இதில் பெற்றது என்ன இழந்தது என்ன அனைத்தும் சேர்ந்து பரபர விறுவிறு ஆக்சன் கிளைமாக்ஸ் தான் கதை.
எல்லோரும் ஆரோக்கியமாக நிம்மதியாக எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்வோம்' இதை அழுத்தமாகவே அஜித் சொல்லும் இடத்தில் படத்தின் நாயகனாகவும் ரியல் லைஃப் ஹீரோவாகவும் தெரிகிறார். படம் முழுக்க விதவிதமான லுக் நிறைய எமோஷனல் காட்சிகள் என தனக்கான பங்கை சரியாக புரிந்து கொண்டு தன்னை நம்பி தான் கதை பயணிக்க இருக்கிறது என்பதை அறிந்து எப்போதுமான மாஸ் கிளாஸ் நடிப்பை கொடுத்திருக்கிறார். வழக்கம் போலவே அவரது ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கார் சேஸிங், ரேசிங் என கார் சார்ந்த நிகழ்வுகளும் ஒருசேர இந்த படம் நிச்சயம் இரண்டு வருடங்கள் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு நல்ல விருந்துதான். த்ரிஷா நடிக்க வந்து 20 வருடங்களைக் கடந்து விட்டது என்பது மற்ற மொழிக்காரர்களுக்கு சொன்னால் தான் தெரியும் அந்த அளவிற்கு இன்னமும் அவருடைய அழகும் இளமையும் மாறவே இல்லை. ஆனால் நடிப்பில் இன்னமும் ஏன் தடுமாறுகிறார் என்பதுதான் புரியவில்லை. நிறைய எமோஷனல் காட்சிகள் டெம்ப்ளேட் வகையறாக்களாகவே இருக்கின்றன.
ஒரு பெரிய வில்லன் அதுவும் அஜித் போன்ற மாஸ் ஹீரோவுக்கான வில்லன் என்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டவர் அர்ஜுன். அதற்கு என்ன நியாயம் சேர்க்க முடியுமோ அதை செய்திருக்கிறார். ஆனால் இந்தக் கதை பொறுத்தவரை அவ்வளவு பெரிய நடிகர் தேவையா என்கிற கேள்வியும் எழுகிறது. ஆரவ் மற்றும் ரெஜினா படத்தின் அடுத்த கிளாஸ் ஹைலைட் அவர்கள் தான். தோற்றம், நடை, உடை என பாலைவனத்தின் நெடுந்தூர பயணத்தில் தென்படும் கஃபே போல் பிட் ஆகவும் இந்த கதைக்கே செதுக்கி வைத்தார் போலவும் இருக்கிறார்கள். பக்கா ஆக்சன் படங்களுக்கு நிச்சயம் இருவருமே பொருத்தமானவர்கள் தான். மற்ற நடிகர்கள் அவரவர் பங்கை கொடுக்கப்பட்ட மீட்டரில் செய்திருக்கிறார்கள். அப்படியே அதிகம் நடித்தாலும் கதையில் அவ்வளவுதான் வேலை அவர்களுக்கு.
இவர்களைத் தாண்டி படத்தில் மிகவும் ஹைலைட்டாக தெரிபவர் அனிருத். சவடிக்கா… பாடல் துவங்கிய இடத்திலிருந்து ஆக்சிலரேட்டரை அழுத்தியவர் எங்கும் நிற்கவில்லை. எங்கெங்கே பிரேக் அடிக்க முடியுமோ அடித்து எங்கே வேகத்தைக் கூட்டி பேக்ரவுண்டை தெறிக்க விட முடியுமோ செய்து இருக்கிறார். ஆனால் ரிப்பீட் மோடில் ‘ முயற்சி விக்டோரி…‘ பிஜிஎம் அதிகம் வருவதை தவிர்த்து இருக்கலாம்.
மகிழ்திருமேனியன் திரைக்கதையில் எப்போதுமே சோடை சொல்ல முடியாது. இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. படம் ‘பிரேக் டவுன்‘ படத்தின் கதைதான் என்பதை பேட்டிகளிலேயே நேரடியாக, மறைமுகமாக சொல்லிவிட்ட நிலையில் முடிந்தவரை திரைக்கதையில் தன் திறமையைக் காட்டியிருக்கிறார். கிடைக்கும் கேப்பில் விறுவிறு பரபரவென கதை சொல்லி இருக்கிறார். அதே சமயம் அந்த விறுவிறுப்பு சில இடங்களில் அவசரமாகவும் தெரிகிறது. நாடுகளுக்கிடையேயான பயணம் அஜித் திரிஷா இருவருக்குமான குடும்ப பிளாஷ்பேக் காட்சிகள் இவற்றில் இன்னும் தெளிவான கதை சொல்லலை கையாண்டிருக்கலாம். ஒரே நேரத்தில் பல ஃப்ளாஷ் பேக் தருணங்கள் என்பது நிச்சயம் சிலரை குழப்பும். ஆனால் ஆக் ஷன் அதிரடி பேக்கேஜ் வழக்கமான மகிழ்திருமேனி ஸ்டைலில் ஸ்டைலான கிஃப்ட் பேக்காகவே வந்திருக்கிறது.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் இதுவரை நாம் கண்டிராத அஜர்பைஜான், ஜியார்ஜியா இடையேயான சாலைகள், பாலைவன கபே, பார்கள், ஆளில்லா மணல் மேடுகள் என மிக அற்புதமான கலர் டோனில் காட்சியாக்கப்பட்டிருக்கிறது. என்.பி.ஸ்ரீகாந்த் எடிட்டிங் ரொம்ப கறார். சில இடங்களில் துண்டாகவே வெட்டித் தூக்கியிருக்க வேண்டும். பிளாஷ் பேக் காட்சிகள் அடுத்தடுத்து வந்து சுத்தலில் விடுகின்றன.
ஆளில்லா சாலையில் கண்ணில் படும் அத்தனை பேருமே தமிழர்களாக இருப்பார்களா ? என்கிற சந்தேகம் சினிமாவின் கிளிஷேக்கள் நிற்கிறது. மேலும் கிழக்கு ஐரோப்பா போலீஸ் இவ்வளவு அசால்ட்டாவாகவா இருப்பார்கள். அதுவும் ஏதோ ஊர்வலத்துக்கு வந்த ஊரோரக் காவல் படை உறுப்பினர் போல், கண்ணிலேயே யார் குற்றவாளி எனக் கண்டுபிடித்துவிட மாட்டார்களா என்ன. இப்படி நிறைய லாஜிக் பிரச்னைகள். குறிப்பாக இந்த ஸ்மார்ட் போன் யுகத்திலும் நிறைய டெக்னாலஜிகள் பயன்பாடு தேக்கம் தெரிகிறது.
மொத்தத்தில் விடாமுயற்சி அஜித் ரசிகர்களுக்கு விருந்து, ஆக்ஷன் விரும்பிகளுக்கு ஆறுதல் மருந்து. மற்றவர்களுக்கு இதுவும் கடந்து போகும் ஒரு அஜித் படம்
Comments