நிதி முறைகேட்டு வழக்கில் அதிபர் டிரம்பின் மகளா???
அமெரிக்க அதிபராக இருந்துவரும் டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையை விட்டு காலி செய்யப் போகிறார். இந்நிலையில் டிரம்ப் பதவியில் இருக்கும்போதே அவருடைய மகள் இவாங்கா நிதி முறைகேட்டில் ஈடுபட்டார் எனக் கூறி அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த முறைகேடு அவருடைய தனிப்பட்ட விஷயம் அல்ல என்றும் டிரம்புக்கு சொந்தமான அனைத்து தொழில் நிர்வாகத்தையும் இவர்தான் நிர்வகித்து வந்தார் என்ற தகவலும் வெளியாகி அந்நாட்டில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
டிரம்ப்பின் குடும்பத்திற்கு மிகப் பெரிய ஹோட்டல் பிசினஸ் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர பல தொழில் நிறுவனங்களுக்கும் டிரம்ப் சொந்தக்காரராக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்நிறுவனத்தின் அனைத்து நிர்வாக வேலைகளையும் அவரின் மகள் இவாங்காதான் கவனித்து வருகிறார். தற்போது அவருடைய நிர்வாகத்தில் அரசாங்கத்தின் பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இவாங்காவிடம் தற்போது விசாரணை தொடங்கப்பட்டு உள்ளதகாவும் கூறப்படுகிறது.
அதிபர் டிரம்ப் பதவி ஏற்றுக் கொண்டபோது அவரது கட்சி சார்பாக ரூ.790 கோடி நிதி திரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையானது டிரம்ப் குடும்பத்தின் தொழில் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது எனக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மேலும் இந்த நிதியில் இருந்து டிரம்ப்பின் குடும்பம் ஆதாயம் தேடியதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள டிரம்ப்புக்குச் சொந்தமான ஓட்டலில் பெரும்பாலான அரசாங்க கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்கள் பெரும்பாலும் நிர்பந்தத்தின் பேரில் நடத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதேபோல அங்கு நடக்கும் அரசு சார்பான கூட்டங்களுக்கு அதிகபடியான கட்டணம் வசூலிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதோடு அதிபராக டிரம்ப் பதவியேற்றுக் கொண்ட நாளான ஜனவரி 20,2017 அன்று மாலை டிரம்ப்புக்கு சொந்தமான சர்வதேச ஓட்டலில் ஒரு விழா நடத்தப்பட்டதாகவும் அதில் இவாங்கா முதற்கொண்டு டிரம்ப்பின் 3 வாரிசுகளும் கலந்து கொண்டனர் எனக் கூறப்படுகிறது. இந்த விழாவிற்கு ரூ.22.14 கோடி கூடுதல் கட்டணம் செலுத்தப்பட்ட நிலையில் இந்தத் தொகையை லாப நோக்கமற்ற ஒரு நிறுவனம் செலுத்தியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும் அரசாங்கத்துக்கு சொந்தமான ரூ.7.38 கோடி டிரம்ப்பின் குடும்பத் தொழில்களில் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அவற்றை திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சர்ச்சை கருத்து வெளியாகி இருக்கிறது. இதனால் டிரம்ப்புக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்து அதன் முடிவுகள் வெளியான பின்னரும் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அவருடைய தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் அவருடைய நிர்வாகத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக அடுத்த பரபரப்பு ஆரம்பித்து விட்டது. ஆனால் இந்த சர்ச்சைக் குறித்து கருத்துத் தெரிவித்த இவாங்கா இந்த வழக்கு பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறு ஒன்றும் இல்லை எனத் தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த சர்சசை குறித்து வெள்ளை மாளிகை எந்த விளக்கத்தையும் வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.