close
Choose your channels

வார்த்தை வித்தகன்...! வரிகளில் வசியம் செய்யும் வைரமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்து....!

Tuesday, July 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவிதை என்றாலே வைரமுத்து, வைரமுத்து என்றாலே தமிழ்ப்பற்று என தமிழ்நெஞ்சுகளில் நீங்கா இடம்பிடித்திருப்பவர், வரிகளில் வசியம் செய்யும் வைரமுத்து. ஹைக்கூ, கவிதை, பாடல் என்றால் முதலில் நினைவில் வந்து சுட்டுவிட்டுப்போவது வைரமுத்து அவர்கள் தான். அந்த அளவிற்கு அவருடைய வார்த்தைகள் இலக்கிய செருக்குடனும், தமிழ் ஆளுமையுடனும், வாழ்வின் எதார்த்தத்துடனும் நம்மை காதலுடன் வருடிவிட்டுப்போகும்.

தமிழ் சினிமாவில் தலைசிறந்த கவிஞராகவும், புகழ்பெற்ற பாடலாசிரியராகவும் தமிழ்செருக்குடன் வலம் வருபவர் தான் வைரமுத்து அவர்கள். 1980-இல் பாடல் துறையில் காலூன்றிய வைரமுத்து, அன்றைய ரசிகர்கள் முதல் இன்றைய மாடர்ன் இளைஞர்கள் வரை அனைவரையும் தன் வரிகளால் கட்டிப்போடும் வார்த்தைஜாலம் மிக்கவர். ஏராளமான விருதுகளைப்பெற்று, அவற்றிற்கே பெருமை சேர்த்த வைரமுத்துவை ஒரு கட்டுரையில் அடக்கமுடியாது.பட்டங்களின் நாயகன், தமிழ்மொழியின் தலைசிறந்த காவலன், காதலை வரிகள் மூலமாக புனையச்செய்த வாசகர்களை வசியம் செய்த வைரமுத்து அவர்களை பற்றி இதில் காண்போம்.

ஆரம்ப கால வாழ்க்கை:

தமிழகத்திலே, தேனி மாவட்டம், வடுகபட்டியில் பிறந்த கவிவித்தகன் தான் வைரமுத்து. விவசாய தம்பதியான ராமசாமித்தேவர் - அங்கம்மாள்-க்கு பெற்றோர் என்ற அந்தஸ்தை கொடுத்த வைரக்கட்டி, சூலை 13, 1953-இல் பிறந்தார். உயர்நிலைப்பள்ளி படிப்பை வடுகபட்டியிலே படித்தவர், மாவட்டத்திலே முதல் மதிப்பெண் பெற்று வெளிப்பதக்கத்தையும் வாங்கினார். கடந்த 1970-ஆம் ஆண்டு, சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் தான் இளங்கலை பட்டப்படிப்பை படித்து முடித்தார். இவருக்கு பொன்மணி என்ற மனைவியும், மதன் கார்க்கி, கபிலன் என்ற இரு மகன்களும் உள்ளனர். இவர்களும் தற்போது தமிழ்த்திரையுலகில் முன்னணி பாடலாசிரியர்களாக வலம் வருகின்றனர்.

தான் வசிக்கும் கிராமத்தின் சுற்றுப்புற சூழலை ரசித்து, 10 வயதில் கவிதை எழுத துவங்கினார் வைரமுத்து. திருவள்ளுவரின் திருக்குறளால் ஈர்க்கப்பட்ட அவர், தன்னுடைய 14- ஆம் அகவையில் வெண்பா எழுதக்கற்றுக்கொண்டார். பள்ளியில் பயிலும் போதே பேச்சுப்போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டு, மாவட்ட அளவில் பரிசுகளை வென்றவர். தன்னுடைய இளம் பருவத்தில், பெரியாரின் சிந்தனை , அண்ணாவின் தமிழ்நடை , கலைஞரின் இலக்கியத்தமிழ், ஆதித்தனாரின் தமிழ்புலமை, பாரதிதாசன், கண்ணதாசன் மற்றும் பாரதியாரின் கவிதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் வைரமுத்து.

அரசு ஏடான "தமிழரசு " நடத்திய கவிதைப்போட்டிகள், கல்லூரிகள் அனைத்திலும் நடக்கும் பேச்சுப்போட்டிகள் உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டு, 70-திற்கும் மேலான முதற்பரிசுகளை தட்டிச்சென்றுள்ளார். கல்லூரிக் கவிஞர், கல்லூரி நாவலர் போன்ற பட்டங்களை பெற்ற வைரமுத்து, 19-வயதில், கல்லூரி 2- ஆம் ஆண்டு பயிலும்போதே "வைகறை மேகங்கள்" என்ற தன்னுடைய முதல் படைப்பை வெளியிட்டார். அந்நூலின் அணியுரையிலே "வைரமுத்துவுக்கு வளமான எதிர்காலம் உண்டு" என கண்ணதாசன் அவர்கள் பாராட்டியிருப்பார். இந்த தொகுப்பானது, மகளிர் கல்லூரிக்கு பாடமாகும் அளவிற்கு சிறப்பு அந்தஸ்து பெற்றிருந்தது. அன்றைய முதல்வரான கலைஞர் கருணாநிதி முன்னிலையில், கவிதை பாடும் திறமையை வைரமுத்து பெற்றிருந்தார். இதன்பின் தமிழ் இலக்கியத்தில் எம். ஏ. முடித்து, முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்து தங்கப்பதக்கம் பெற்றார். இதையடுத்து 1979-இல் தன் 2-ஆம் படைப்பான 'திருத்தி எழுதிய தீர்ப்புகள்' என்ற படைப்பையும் வெளியிட்டார்.

தமிழ் திரையுலகில்:

சினிமாவின் பொற்காலமான 80-களில் தான், இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா கூட்டணி, ரசிகர்கள் மத்தியில் அச்சாரம் போல நின்றது. 1980-இல் பாரதிராஜாவை வைரமுத்து பார்க்க சென்றபோது, இது என்னுடைய கவிதை, புரிந்துகொள்ள முடிந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்" என "திருத்தி எழுதிய தீர்ப்புகள்" புத்தகத்தை கொடுத்து விட்டுச் சென்றார். இவரின் கவிதைகளால் வியந்துபோன பாரதிராஜா, நிழல்கள் படத்திற்காக தொலைபேசியில் அழைத்து, யோவ்… அட்லாண்டிக் ஹோட்டல் ரூம் நம்பர் 410 க்கு உடனே கிளம்பி வா… "என்று கூறியுள்ளார். அங்கு விரைந்து சென்ற வைரத்தை, இளையராஜாவிற்கு அறிமுகம் செய்து வைக்கிறார் பாரதிராஜா."

இசைஞானி " மெட்டுக்கு எழுதுவிங்களா… "என்று கேட்க, "மெட்டை சொல்லுங்கள் முயற்சி செய்வோம்" என்று கம்பீரமாக கூறியுள்ளார். மெட்டு வாசித்ததை கேட்ட வைரமுத்து, சில கணங்கள் யோசித்து விட்டு "இது ஒரு பொன்மாலை பொழுது" என பாடுகிறார். இதைக்கேட்டு அவரை கட்டியணைத்த இளையராஜா "சினிமாவில் இவர் பல யானைகளை சாய்ப்பார்… " என்று கூறியுள்ளார். முதல் பாடல்பிறந்த அன்றேதான், இவரின் முதல் புதல்வம் மதன்கார்க்கி-யும் பிறந்துள்ளார். இதனால் "ஒரே பிரசவத்தில் இரட்டைக்குழந்தைகள்" என வைரமுத்து அடிக்கடி சொல்வதுண்டு.கிட்டத்தட்ட 7 வருடங்கள் இவர்கள் கூட்டணியில் இசையும், கவிதையும் காதலித்து வந்தது.

நினைவெல்லாம் நித்யா, முதல் மரியாதை, புன்னகை மன்னன், வேதம் புதிது, கொடி பறக்குது, புதிய முகம், ஜென்டில்மேன், கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, காதலன், பவித்ரா, டூயட், முத்து, இந்திரா, பாட்ஷா, இந்தியன், இருவர் , நிலாவே வா , காதல் மன்னன் , ஜீன்ஸ் , துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஆடுகளம், முதல்வன், படையப்பா, சங்கமம், ஜோடி, குஷி , ரிதம், ஆளவந்தான் , முகவரி, அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பார்த்தேன் ரசித்தேன், பூவெல்லாம் உன் வாசம், மஜ்னு, ஷாஜகான், சிட்டிசன், கன்னத்தில் முத்தமிட்டால், வில்லன், ஜெமினி, அன்பே சிவம், இயற்கை, செல்லமே, அட்டகாசம், ஆயுத எழுத்து, வசூல் ராஜா MBBS, உள்ளம் கேட்குமே, வரலாறு, அந்நியன், சிவாஜி: தி பாஸ், மொழி, குரு, தசாவதாரம், அசல், மோதி விளையாடு, சிவப்பு மழை, ஆனந்த தாண்டவம், அயன், எந்திரன், ராவணன், வாகை சூட வா, யமுனா, நீர்ப்பறவை, மற்றும் கடல் உள்ளிட்ட ஏராளாமான ஹிட் பட பாடல்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார்.விருதுகளின் நாயகன்:

சிறந்த பாடல் ஆசிரியர் - 1982 - தமிழக அரசு விருது (எம்ஜிஆர்- இடம் பெற்றார்)

முதல்மரியாதை படம் - 1986 - சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது (குடியரசுத்தலைவரிடம் பெற்றார்)

ரோஜா திரைப்படம் - 1992 - சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது

கருத்தம்மா திரைப்படம் - 1994 - சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது

சிறந்த பாடல் ஆசிரியர் - 1994, 1995 - தமிழக அரசு விருது (முதல்வர் கருணாநிதியிடம் பெற்றார்)

பத்மஸ்ரீ பட்டம் பெற்றுள்ளார்.

கள்ளிக்காட்டு இதிகாசம் - சாகித்திய அகாடமி விருது

மூன்றாம் உலகப் போர் நாவல் - மலேசிய அறவாரியத்தில் சிறந்த நூலாக தேர்ந்தெடுக்கப்பட்டது

சிறந்த கலைத்துறை வித்தகர் - 1989 - தமிழக அரசின் பாவேந்தர் விருது

சிறந்த கவிஞர் -1995 - தமிழக அரசு விருது (அன்றைய முதல்வரிடம் 2 முறை பெற்றார்)

கவியரசு பட்டம் - 1986 - தமிழ் வளர்ச்சி மன்றம் வழங்கியது, ஆனால் இப்பட்டத்தை 1998 ல் தாமே துறந்தார்

பெய்யெனப் பெய்யும் மழை என்ற நூலை வெளியிட்ட அன்றைய முதல்வர் மு. கருணாநிதி தான் "கவிப்பேரரசு" என்ற பட்டத்தையும் இவருக்கு வழங்கினார்.

புத்தகம் என்கிற காவியங்கள்:

கவிராஜன் கதை, இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, திருத்தி எழுதிய தீர்ப்புகள், ரத்த தானம், சிகரங்களை நோக்கி, வில்லோடு வா நிலவே, இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள், இதுவரை நான், கள்ளிக்காட்டு இதிகாசம் உள்ளிட்ட 30-திற்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். புதுக்கவிதையில் பாரதியாரின் வரலாற்றை "கவிராஜன் கதை" என்ற புத்தகம் மூலம் எழுதிய இவருக்கு, பாரதி இலக்கிய பரிசு ரூ 10,000 கிடைத்தது.

கடல் குறித்து ஆய்வு நூல்கள் கற்றறிந்து, 6 மாதங்கள் ஆராய்ச்சி செய்து, "தண்ணீர் தேசம்" என்ற கடலுக்குள் உள்ள காதல் காவியத்தை படைத்தார். வைரமுத்துவின் படைப்புகள் இந்தி, ஆங்கிலம் மற்றும் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. "சமூக இலக்கியப் பேரவை" என்கிற அமைப்பை நிறுவி, தமிழ்ப்படைப்பாளிகளுக்கு ஊக்கம் தந்து வருகிறார். பாரெங்கும் தமிழை பரப்பும் பணியில் ஈடுபட்டு வரும் இவரின், "தமிழாற்றுப் படை" புத்தகம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. 5 படங்களுக்கு கதை, வசனமும், 5000-த்திற்கும் மேல் திரைப்படப்பாடல்களையும் எழுதியுள்ளார்.வைரமுத்து அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்ததில் 4 பேர் முனைவர் பட்டமும் 15 பேர் எம்ஃபில் பட்டமும் பெற்றுள்ளனர்.

குறிப்பாக முதல் மரியாதையில், பூங்காற்று திரும்புமா, ரோஜாவில் சின்ன சின்ன ஆசை, கருத்தம்மாவில் போறாளே பொன்னுத்தாயி, சங்கமத்தில் முதல் முறையே கில்லி பார்த்தேன், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே, தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் கள்ளிக்காட்டில் பிறந்த தாயே உள்ளிட்ட பாடல்களுக்காக 6 முறை தேசிய விருது பெற்று, இப்பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இவர் எழுதிய பல பாடல்கள் கதையையும், படத்தையும் தாண்டி ரசிகர்களை வார்த்தைகளால் கவரச்செய்திருக்கும். குறிப்பாக ராசாத்தி என் உசுரு என்னதில்ல" பாடல் படத்தையே மிஞ்சும் அளவிற்கு ஹிட் என்று படக்குழுவினர் பலமுறை கூறியிருப்பர். இளைராஜா, பாரதிராஜா, வைரமுத்து கூட்டணிக்குப்பின், ரஹ்மான், மணிரத்னம், வைரமுத்து கூட்டணி தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி கண்டது. இவர்களின் காம்போ என்றாலே வெற்றி என கொண்டாடும் அளவிற்கு ரசிகர்கள், இக்கூட்டணியை கொண்டாட ஆரம்பித்தனர்.

இந்த வருடம் வைரமுத்து அவர்கள் "நாட்படு தேறல்" என்ற தலைப்பில் 100 பாடல் வரிகளை உருவாக்கியுள்ளார். இப்பாடல்கள் 100 இயக்குனர்கள், 100 இசையமைப்பாளர்கள் மற்றும் 100 பாடகர்கள் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை 13 பாடல்கள் இத்தொகுப்பில் வெளியாகியுள்ளது, ரசிகர்கள் இவரின் பாடல்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஒவ்வொரு பாடலும் ஆழ்கடலில் இருந்தெடுத்த முத்து போலவும், கருவில் இருந்து பெற்ற பிள்ளை போலவும், அதியமானின் மாங்கனி போலவும், சிற்பி செதுக்கிய சிலையாகவும், பட்டை தீட்டிய வைரமாகவும் அதிசயமாகவும், அழகாகவும், ஆச்சரியத்துடன் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்று ஜொலிக்கின்றன.

கலைமாமணி விருதும், பத்மஸ்ரீ விருதும், கவியரசு, கவிப்பேரரசு, காப்பியசாம்ராட் என்றும் ஏராளமான பட்டங்கள் பெற்ற வைரமுத்து அவர்களின் வாழ்க்கை சுவாரசியங்கள் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். இன்று தன்னுடைய 69-ஆவது அகவையில் காலடி வைக்கும் வைரமுத்து அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நம் தமிழ்ச்சமூகம் மேன்மையடைய இன்னும் இவர் பல பாடல்களையும், கவிதையும் புனைய வேண்டும். கவிஞரின் தமிழும், கவிதையும், பாடலும் இன்னும் காதல் ரசத்துடன், இளமை ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.