close
Choose your channels

கொல்கத்தாவை விரட்டியடிக்க தல தோனியின் சிஷ்யன் தயார்

Friday, March 25, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதல் டாஸ் போடப்படுவதற்கு முன்பே பரபரப்பு பற்றிக்கொண்டுவிட்டது. தல தோனி கேப்டனாக நீடிப்பாரா என்ற சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று எல்லாவற்றிலும் சூரத்தனம் காட்டிவரும் ரவீந்திர ஜடேஜாவுக்கு வழிவிட்டு ஒதுங்கியிருக்கிறார் தோனி.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 தொடக்க ஆட்டம், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கும் ரன்னர் அப் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கும் இடையே மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இரண்டு அணிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சென்னை அணியின் அடையாளமான தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகி சாதாரண வீரராகக் களமிறங்குகிறார். ஜடேஜா தலைமை தாங்குகிறார். கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் அய்யர் செயல்படுகிறார்.

வெற்றிக் கோப்பையுடன் தோனிக்கு விடை கொடுக்க ஆர்வமாக இருக்கும் சிஎஸ்கே அணி, ஐபிஎல் 2022 சீசனில் வலுவான தொடக்கத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனிக்கு இது இறுதி சீசனாக இருக்கலாம். ஐபிஎல்15க்குப் பிறகு அவர் பயிற்சியாளராகத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளின் மோதல் வரலாறு

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் 26 முறை விளையாடியுள்ளன. இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் விளையாடிய போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு இல்லை.

கடந்த ஐபிஎல் 2021இல் சென்னை, கொல்கத்தா அணிகள் லீக் கட்டத்தில் இரண்டு முறையும் இறுதிப் போட்டியில் ஒரு முறை என மொத்தமாக 3 முறை மோதின. மூன்று முறையும் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

சென்னை அணி முதலில் பேட்டிங் செய்த 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்த 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி இரண்டாவது பேட்டிங் செய்த 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி இரண்டாவதாக பேட்டிங் செய்த 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது கடைசி 5 ஆட்டங்களில் 4 ஆட்டங்களில் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் தனது கடைசி 5 ஆட்டங்களில் 2 ஆட்டங்களில் வென்று 3-ல் தோல்வியடைந்துள்ளது. இதுவரை ஒரே போட்டியில் சென்னை அணி கொல்கத்தாவுக்கு எதிராக அடித்த அதிகபட்ச ஸ்கோர் 220, கொல்கத்தா சென்னைக்கு எதிராக அதிகபட்சமாக 202 ரன்கள் அடித்துள்ளது.

அணியின் வலிமை

கடந்த சீசனில், சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசையை கட்டமைத்தவர் ருத்துராஜ் கெய்க்வாட். கடந்த ஆண்டு நட்சத்திர வீரராக உருவேடுத்த அவர் 16 போட்டிகளில், 45.36 சராசரியுடன் 140 ஸ்டிரைக் ரேட்டில் 635 ரன்கள் எடுத்தார்.

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு பெரிய தடைகள் உள்ளன. முதலாவதாக மொயீன் அலியின் விசா பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை என்பதால் அவர் முதல் போட்டியில் ஆட மாட்டார். இரண்டாவதாக, தீபக் சாஹர் காயமடைந்துள்ளதால், அவர் எப்பொழுது அணியில் சேர்வது என்பது குறித்து தெளிவில்லாமல் இருக்கிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ஜடேஜா, சிவம் துபே, எம் எஸ் தோனி, டுவைன் பிராவோ என பேட்டிங் வரிசை கலக்கலாக உள்ளது.

பந்துவீச்சைப் பொறுத்தவரை, தீபக் சாஹருக்கு காயமடைந்துள்ளதால், கிறிஸ் ஜோர்டான் அல்லது ஆடம் மில்னேவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை, அலெக்ஸ் ஹேல்ஸ் இல்லாதது அணிக்குப் பெரிய அடியாகும். மேலும் பாட் கம்மின்ஸ் சில காரணங்களால் ஆரம்ப ஆட்டங்களில் விளையாட மாட்டார். எப்படி இருந்தாலும் சிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் என்று பௌலிங்கிக்கு பஞ்சமே இல்லை.

பேட்டிங் வரிசைக்கு வரும்போது, வெங்கடேஷ் அய்யர், அஜிங்க்ய ரஹானே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இன்னிங்ஸைத் தொடங்குவார்கள் எனத் தெரிகிறது. கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 3வது இடத்தில் விளையாட அவரைத் தொடர்ந்து நிதிஷ், ஆண்ட்ரே ரசல், சாம் பில்லிங்ஸ், சுனில் நரைன் ஆகியோர் விளையாடுவார்கள். சுனில் நரேன் தொடக்க ஆட்டக்காரராக அவதாரம் எடுக்கவும் வாய்ப்புண்டு.

நாளை நடக்கவிருக்கும் போட்டியில்தான் இரு அணிகளுமே தனது புது வீரர்களை எப்படிக் கையாளுகிறது என்று தெரியும்.

நாளை போட்டியில் களமிறங்கக்கூடிய அணிகள்:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

1.ருதுராஜ் கெய்க்வாட், 2.ராபின் உத்தப்பா, 3.டெவன் கான்வே, 4.அம்பதி ராயுடு, 5.எம்எஸ் தோனி (WK), 6.ரவீந்திர ஜடேஜா(C), 7. ஷிவம் துபே, 8.டுவைன்-பிராவோ, 9.கிறிஸ் ஜோர்டான், 10.ஆடம் மில்னே, 11. பிரசாந்த் சோலங்கி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

1.வெங்கடேஷ் அய்யர், 2.அஜிங்க்ய ரஹானே, 3. ஷ்ரேயஸ் அய்யர் (C), 4.நிதிஷ் ராணா, 5.சாம் பில்லிங்ஸ் (WK), 6.ஆண்ட்ரே ரசல், 7.முகமது நபி, 8.சுனில் நரைன், 9. உமேஷ் யாதவ் , 10.சிவம் மாவி, 11.வருண் சக்கரவர்த்தி

போட்டி நேரம் மாலை 7.30

- இளவரசன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.