ரஜினிகாந்த் நியமனம் செய்த இருவர் யார்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தபோது தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். மேலும் கட்சி வேலை என்பது பிரமாண்டமான வேலை என்றும், அதனை செய்வதற்கு இருவரை தான் நியமனம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் அவர்களை நியமனம் செய்வதாகவும், ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தி அவர்கள் செயல்படுவார் என்றும் ரஜினிகாந்த் அறிவித்தார். அர்ஜூனமூர்த்தி அவர்கள் எனக்கு கிடைத்தது கடவுள் எனக்கு கொடுத்த வரம் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
மேலும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40% உள்ளது என்றும், அதை முடித்து கொடுக்க வேண்டியது தனது கடமை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனமூர்த்தி அவர்கள் கூறியபோது, மாற்று அரசியலை முன்னெடுக்க ரஜினி மக்கள் மன்றம் தயாராக உள்ளது என்றும், எனது அரசியல் பயணத்தில் உறுதுணையாக இருக்கும் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி என்றும் கூறினார்.