சூர்யா-ஜோதிகா: ஜில்லுன்னு ஒரு காதல்

Suriya-Jyothika

கோலிவுட் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளுக்கு பஞ்சமில்லை. என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம், ஜெமினிகணேசன் - சாவித்ரி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரி, ஏவிஎம்.ராஜம் - புஷ்பலதா, மணிரத்னம் -சுஹாசினி, பஹத்பாசில் - நஸ்ரியா, பிரசன்னா-சினேகா, அஜித்-ஷாலினி, சுந்தர் சி -குஷ்பு, என அடுக்கி கொண்டே போகலாம். அந்த வகையில் மிகச்சிறந்த நட்சத்திர ஜோடிகளில் ஒன்று சூர்யா-ஜோதிகா. இந்த நட்சத்திர ஜோடி இன்று தங்களது 11வது திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்

சூர்யா-ஜோதிகாவின் முதல் படம்:

Suriya-Jyothika

சூர்யாவின் முதல் படம் இயக்குனர் வசந்த் இயக்கிய 'நேருக்கு நேர்', ஜோதிகாவின் முதல் படம் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய 'வாலி. இந்த நிலையில் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் 'பூவெல்லாம் கேட்டுப்பார். ஜோதிகா நாயகியாக நடித்த முதல் படம் இதுவே. இந்த படத்தில் நடிக்கும்போது இருவரும் ஒரு சக நட்சத்திரமாகவே பழகியதாகவும், இவர்களுக்குள் காதல் எழவில்லை என்றும் கூறப்படுகிறது. அப்படியானால் முதல் காதல் தோன்றியது எப்போது?

முதல் காதல்:

Suriya-Jyothika

ஆளவந்தான்' படத்திற்கு பின்னர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த படம் 'காக்க காக்க'. கவுதம் மேனன் இயக்கிய இந்த படத்தின்போது சூர்யாவை விட ஜோதிகா பெரிய ஸ்டார் என்பதால் அவருக்கு சம்பளமும் அதிகமாம். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் இருவருக்கும் காதல் மின்னல் ஏற்பட்டதாகவும், ஆனால் அதை இருவருமே ரகசியமாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

காதல் ரகசியம் வெளிப்பட்டது எப்படி?

Suriya-Jyothika

காக்க காக்க' திரைப்படம் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் சூர்யா -ஜோதிகா காதல் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிப்படத் தொடங்கியது. ஒருநாள் தாணுவின் அலுவலகத்திற்கு `நந்தி சாமியார்' என்ற பெயர் கொண்ட சாமியாரை காஞ்சீபுரத்தை சேர்ந்த ஒரு தியேட்டர் அதிபர் அழைத்து வந்தார். எல்லோருக்கும் சாமியார் ஆசி வழங்கினார். அதோடு சிலரிடம் அவர்களின் பிரச்சினைகளை 5 நிமிட நேரத்துக்கு குறையாமல் பேசினார்.நடிகர் சூர்யாவும் சாமியாரை சந்தித்து ஆசி பெற்றார். அவரிடம் தனியாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் சூர்யாவின் மனதில் இருந்த காதல் விஷயங்களை சாமியார் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்த, சூர்யா மிரண்டு போய்விட்டாராம். 'எப்போது திருமணம் செய்து கொள்ளலாம்?' என்று சூர்யா கேட்டபோது, 'இந்தப்படத்தில் நடித்து முடித்ததும் திருமணம் செய்து கொள்' என்று கூறினாரம். மேலும் தாணுவிடம் விடைபெற்று செல்லும்போது, 'காதலில் சூர்யா ரொம்பவே தீவிரமாக இருப்பதாகவும், சீக்கிரம் படத்தை எடுத்து முடித்துவிடும்படியும் அறிவுரை கூறினாராம். உண்மையாகவே காதலர்களாக மாறியதால் தான் இந்த படத்தின் காதல் காட்சி மிக இயல்பாக இருந்தது பின்னர் தெரியவந்தது.

திரையிலும் மின்னிய ஜோடி:

Suriya-Jyothika

'காக்க காக்க' ஒரு ஆக்சன் படமாக இருந்தாலும் இந்த படத்தின் ரொமான்ஸ் காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. திரைத்துறையினர்களும் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியை பயன்படுத்த தொடங்கினார்கள். அதன் விளைவு 'பேரழகன், 'ஜில்லுன்னு ஒரு காதல்', 'மாயாவி', என தொடர்ச்சியாக ஜோடி போட்டனர்.

வீட்டில் எதிர்ப்பும் விடாப்பிடியான மனவுறுதியும்:

Suriya-Jyothika

சூரியா-ஜோதிகா காதலை ஜோதிகாவின் வீட்டில் ஏற்றுக்கொண்டாலும், சூர்யாவின் வீட்டில் ஏற்றுக்கொள்வதில் சில தயக்கங்கள் இருந்தன. சூர்யாவின் தந்தை சிவகுமார் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பின்னர் சூர்யாவின் மனவுறுதியை கண்டு ஜோதிகாவிடம் நீண்ட நேரம் பேசிவிட்டு பின்னர் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதாகவும் கூறுவதுண்டு.

திருமணமும், குடும்ப வாழ்க்கையும்:

Suriya-Jyothika

உண்மைக்காதல் என்றும் தோல்வி அடையாது என்ற வகையில் சூர்யா-ஜோதிகாவின் காதலும் இனிதே திருமணத்தில் முடிந்தது. கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் சூழ இருவருக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. இந்த நட்சத்திர ஜோடிக்கு 2007ஆம் ஆண்டு தியா என்ற பெண்குழந்தையும் 2010ஆம் ஆண்டு தேவ் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகிய ஜோதிகா பொருப்பான குடும்ப பெண்மணியாக இருந்து வந்தார்.

மருமகளுக்கு தமிழ் கற்றுக்கொடுத்த மாமியார்:

Suriya-Jyothika

ஜோதிகா பிறந்து வளர்ந்தது மும்பை என்பதால் அவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. ஆரம்ப காலத்தில் தமிழை சூர்யா கற்று கொடுத்தாலும், திருமணத்திற்கு பிறகு, மாமியாரிடம் முழுமையாக தமிழ் கற்றுக்கொண்டார் ஜோதிகா. இப்போது தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர் போல தமிழ் சரளமாக பேசும் அளவுக்கு அவரது தமிழ்ப்புலமை உள்ளது.அதேபோல் சூர்யா 'ரத்தசரித்திரம்' என்ற இந்தி படத்தில் நடித்தபோது இந்தி தெரியாத சூர்யாவுக்கு கற்றுக்கொண்டுத்தது ஜோதிகா தான் என்பது குறிப்பிடத்தக்கது

மீண்டும் திரையுலகம்:

Suriya-Jyothika

ஜோதிகா தற்போது மீண்டும் திரையுலகில் எண்ட்ரி ஆகி ஒருசில படங்களில் நடித்து வந்தாலும் அவர் குடும்பத்தை எப்போதும்போல கவனிப்பதில் தவறுவதில்லை. மேலும் நிஜத்தில் வெற்றிகரமான ஜோடியாக வலம் வரும் சூர்யா-ஜோதிகா மீண்டும் திரையிலும் ஜோடி சேர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ரசிகர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் நாள் மிக விரைவில் வரும் என்று சூர்யாவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மிக விரைவில் அந்த நாளை எதிர்பார்ப்பதோடு மீண்டும் ஒருமுறை இந்த நட்சத்திர ஜோடிக்கு IndiaGlitz சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்ர்

கோலிவுட் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளுக்கு பஞ்சமில்லை.