தமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு

SilkSmitha

100 வருட தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் கவர்ச்சியாக நடித்திருந்த போதும் தனது காந்தக்கண்களால் அனைவராலும் கவரப்பட்டு இன்றும் பேசப்பட்டு வருபவர் நடிகை சில்க் ஸ்மிதா. கடந்த 1960ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி ஆந்திராவில் பிறந்த இவர் தமிழ் சினிமாவில் பெரும் சூறாவளியை கிளப்பியவர்

சினிமாவில் அறிமுகம்

SilkSmitha

சிறு வயதிலேயே பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்ட சில்க் ஸ்மிதாவிற்கு குடும்ப வாழ்க்கை சரியாக அமையாததால், சென்னைக்கு வேலை தேடி வந்தார். ஒப்பனை கலைஞராக பணிபுரிந்த இவரை நடிகர் வினுசக்கரவர்த்தி தனது 'வண்டிச்சக்கரம்' படத்தில் அறிமுகம் செய்தார். சாராய வியாபாரியாக அந்த படத்தில் நடித்த சில்க் ஸ்மிதா முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்பின்னர் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜனுக்கு ஜோடியாக குணச்சித்திர பாத்திரத்தில் நடித்தார். ஆனால் சில்க் ஸ்மிதாவை குணசித்திர கேரக்டரில் ரசிகர்கள் ஏற்று கொள்ள தயாராக இல்லை. இந்த நிலையில் கவர்ச்சியான கேரக்டர்களும், ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்புகளும் அவரை தேடி வந்தன. கடந்த 80களில் இவர் நடனம் ஆடாத படங்கள் மிகவும் குறைவு என்ற அளவில் தான் தமிழ் சினிமா இருந்தது. சிவாஜி போன்ற பெரிய நடிகர்களின் படங்களாக இருந்தாலும் வியாபார நோக்கத்திற்காக சில்க் ஸ்மிதா நடனம் இணைக்கப்பட்ட படங்கள் ஏராளம்

சிலுக்கின் கவர்ச்சி சினிமாக்கள்

SilkSmitha

மூன்றாம் பிறை, சகலகலா வல்லவன், தனிக்காட்டு ராஜா, ரங்கா, தீர்ப்பு, மூன்று முகம், பாயும் புலி, கோழி கூவுது, அடுத்த வாரிசு, தங்க ம்கன், ஜீவா, கூலிக்காரன், போன்ற பல படங்களில் நடனம் மற்றும் சிறு கேரக்டர்களில் நடித்தார். சில்க் சில்க் சில்க், அவசர போலீஸ் 100 போன்ற ஒருசில படங்களில் நாயகியாகவும் சில்க் ஸ்மிதா நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் சில்க் ஸ்மிதா பல படங்களில் நடித்தார்.

நட்பு வட்டாரம்

SilkSmitha

சில்க் ஸ்மிதா கவர்ச்சி நடிகை என்பதால் தன்னிடம் தவறான நோக்கத்தில் பலர் நெருங்குவதை அறிந்து தனது நட்பு வட்டாரத்தை குறைத்து கொண்டவர். திரையுலகில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே இவருக்கு நண்பர்கள் உண்டு. இதனால் இவரை தலைக்கனம் பிடித்தவர் என்றும் கூறுவதுண்டு. அதை தனக்கு கிடைத்த ஒரு பாதுகாப்பாகவும் பயன்படுத்தி கொண்டவர் சில்க் ஸ்மிதா

மர்ம மரணம்

SilkSmitha

17 வருடங்கள் தென்னிந்திய சினிமாவை தனது கவர்ச்சியான கண்களாலும், சொக்கவைத்த உதடுகளாலும் இளவட்டங்கள் உள்பட அனைத்து தரப்பு வயதினர்களையும் கிறங்கடித்த கவர்ச்சிப்புயல் சில்க் ஸ்மிதா, 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் சென்னையில் அவருடைய வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். சொந்தப்படம் தயாரிக்க முயற்சித்ததில் ஏற்பட்ட கடன் தொல்லை மற்றும் காதல் தோல்வி தான் அவருடைய மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டாலும் இன்று வரை அவரது மரணம் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள்

SilkSmitha

சில்க் ஸ்மிதா மறைந்தாலும் அவரது புகழ் மறையவில்லை என்பது அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' என்ற திரைப்படத்தின் வெற்றி உணர்த்தியது. பிரபல பாலிவுட் நாயகி வித்யாபாலன், சில்க் ஸ்மிதா கேரடரில் நடித்து தேசிய விருதையும் தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் மட்டுமின்றி கன்னடம் மற்றும் மலையாளத்திலும் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

சில்க் ஸ்மிதா புத்தகங்கள்

SilkSmitha

கவர்ச்சி புயலாக சில்க் ஸ்மிதா வாழ்ந்து மறைந்தாலும் அவரை பற்றி பல புத்தகங்களும் எழுதப்பட்டன என்பது ஆச்சரியம் தரத்தக்க ஒரு தகவல். 'சிலுக்கு - ஒரு பெண்ணின் கதை' , என்ற நூலை தீனதயாள் என்பவர் எழுதியுள்ளார். சில்க் ஸ்மிதாவை ஒரு நடிகையாக மட்டுமின்றி ஒரு பெண்ணாகவும் அணுகி அவரது வாழ்வை ஆராய்ந்த இந்த புத்தகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் 'சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும்' என்ற புத்தகத்தை களந்தை பீர்முகமது என்பவர் எழுதினார்.

மனதை விட்டு மறையாதவர்

SilkSmitha

சில்க் ஸ்மிதா மறைந்து இருபது வருடங்களுக்கும் மேல் ஆகியும் இன்னும் அவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருவது ரசிகர்களின் மனதில் அவர் இன்னும் மறையவில்லை என்பதையே காட்டுகிறது.

தமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு