சரவணன் - மீனாட்சி போல் செல்பிக்கு முயற்சி: பரிதாபமாக பலியான இளம்பெண்
சென்னை ஆவடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தனது வருங்கால கணவருடன் பாழடைந்த விவசாய கிணறு ஒன்றில் செல்பி எடுக்க முயன்ற போது பலியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் உயிர் தப்பிய இளைஞர் அப்பு என்பவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
நானும் நான் திருமணம் செய்து கொள்ள போகும் மெர்சியும் சென்னை புறநகரில் உள்ள வயல்வெளியில் உள்ள கிணற்றுக்கு அருகே சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது மெர்சி, சரவணன் மீனாட்சி தொடரில் வரும் காட்சியைப் போல் நாமும் கிணற்றின் கடைசி படியில் இறங்கி, செல்பி எடுத்துக் கொள்ளலாம் என்று வற்புறுத்தினார். நான் எனக்கு நீச்சல் தெரியாது, அதெல்லாம் வேண்டாம் என்று கூறினார். ஆனால் பிடிவாதமாக மெர்சி எனக்காக இதைச் செய்யும்படி வற்புறுத்தினார்.
அதன்பின்னர் இருவரும் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தபோது மெர்சி என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே இறங்கியதால் கால் நழுவி தன் மீது விழுந்தார். இதனால்தான் நான் பேலன்ஸ் தவறியதால் இருவரும் கிணற்றுக்குள் விழுந்தோம்.
என்னுடைய அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த ஒரு விவசாயி ஒருவர் என்னை காப்பாற்றினார். அதே போல் மெர்சியையும் அவர் காப்பாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அப்பு ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
ஒரு தொலைக்காட்சி தொடர் அல்லது திரைப்படத்தில் வரும் காட்சிகளை ரசிக்க வேண்டுமே தவிர அதே போன்று நாமும் செயல்பட வேண்டுமென்றால் இதுபோன்ற விபரீதங்கள் நடக்கும் என்றும் ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க கூடாது என்று பலமுறை வற்புறுத்தியும் அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் செயல்படுவதே இதுபோன்ற விபரீதங்கள் நடப்பதற்குக் காரணமாக இருக்கிறது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.