தமிழ் சினிமாவில் தலையெடுத்து வரும் இரண்டாம் பாக சீசன்

Part 2Movies

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சீசன் உருவாகி சில ஆண்டுகள் இருப்பதுண்டு. அந்த வகையில் தற்போது டிரெண்டில் இருக்கும் சீசன் இரண்டாம் பாக சீசன். இரண்டாம் பாகம் தயாரித்து வெற்றி பெறுவது என்பது கோலிவுட்டுக்கு புதிதல்ல. ஏற்கனவே கல்யாணராமன் -ஜப்பானில் கல்யாணராமன், நாளைய மனிதன் - அதிசய மனிதன், அமைதிப்படை -அமைதிப்படை 2, பில்லா - பில்லா 2, பாகுபலி-பாகுபலி 2 , கோ-கோ 2, சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, பீட்சா-பீட்சா 2, விஐபி - விஐபி 2, போன்ற இரண்டாம் பாக திரைப்படங்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் பத்துக்கும் மேற்பட்ட இரண்டாம் பாக திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இந்த கட்டுரையில் அதுகுறித்து பார்ப்போம்

எந்திரன்- '2.0'

Enthiran 2point0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான 'எந்திரன்' தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் என்ற புகழை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த கூட்டணியில் லைகாவும் சேர்ந்துள்ளதால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 450 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளிவரவுள்ள இந்த படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்சயகுமார், ஷங்கரின் 'ஐ' நாயகி எமிஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஸ்வரூபம் 2:

Vishwaroopam 2

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசின்போது மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்து வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பல காட்சிகள் முதல் பாகத்தின்போதே படமாக்கப்பட்டபோதிலும் இந்த படம் காலதாமதமாகி கொண்டே வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளதால் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2:

Indian 2

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இணைந்த 'இந்தியன் 'திரைப்படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி சாதனை வசூல் செய்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் தற்கால அரசியல் வசனங்கள் அனல் பறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் இந்த படமும் ஒரு அதிரடி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சாமி 2:

Saamy 2

விக்ரம், த்ரிஷா நடிப்பில் ஹரி இயக்கிய நெல்லை மண்ணின் மணத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு ஆக்சன் படம் சாமி. இந்த படம் விக்ரம், த்ரிஷா இருவருக்குமே திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை கொடுத்தது. இந்த நிலையில் 14 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது அதே விக்ரம்-ஹரி கூட்டணியில் உருவாகிறது. த்ரிஷா இந்த படத்தில் முக்கிய கேரக்டரிலும், நாயகியாக கீர்த்தி சுரேஷூம் நடிக்கின்றனர்

சண்டக்கோழி 2:

Sandakhozhi 2

விஷால் மற்றும் லிங்குசாமி முதன்முதலாக இணைந்த 'சண்டக்கோழி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் பாகத்தில் நடித்த விஷால், ராஜ்கிரண் மற்றும் மீராஜாஸ்மினுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, சூரி உள்பட பலர் நடித்து வருகின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படமும் முதல் பாகத்தை போலவே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

காஞ்சனா 3:

Kanchana 3

முனி, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய வெற்றிப் படங்களை அடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கவுள்ள படம் 'காஞ்சனா 3'. இந்த படத்தின் நாயகியாக பிக்பாஸ் செல்லப்பிள்ளை ஓவியா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதில் இருந்தே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிற தொடங்கிவிட்டது. முந்தைய படங்களின் வெற்றியை இந்த படமும் தக்க வைத்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மாரி 2:

Maari 2

தனுஷ், அனிருத், பாலாஜி மோகன் கூட்டணியில் உருவான ''மாரி' திரைப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'மாரி 2' திரைப்படம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால் இந்த படத்தில் மிஸ்ஸிங். அவருக்கு பதிலாக 'பிரேமம்' நாயகி சாய்பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார். முதல் பாகத்தின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்த அனிருத் இந்த படத்தில் இணைந்தால் வெற்றி உறுதி என்ற நிலையில் அவர் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

கலகலப்பு 2:

Kalakalappu 2

சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடித்த முழு நீள நகைச்சுவை படமாக வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது கலகலப்பு. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜிவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேதரின் தெரஸா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். முதல் பாகத்தில் இருந்த நகைச்சுவை கலகலப்பு இந்த இரண்டாம் பாகத்திலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சதுரங்க வேட்டை 2:

Sathurangavettai 2

நட்டி நட்ராஜ் நடிப்பில் வினோத் இயக்கிய 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தை தயாரித்த நடிகர், இயக்குனர் மனோபாலாவின் அடுத்த முயற்சிதான் இந்த 'சதுரங்க வேட்டை 2'. இந்த படத்தில் அரவிந்தசாமி, த்ரிஷா, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி, நாசர், மற்றும் சிம்ரன் என ஒரு நட்சத்திர கூட்டத்தையே கூட்டியுள்ளார் தயாரிப்பாளர் மனோபாலா. முதல் பாகத்தை இயக்கிய வினோத் இந்த படத்தின் கதை, திரைக்கதை எழுத இந்த படத்தை நிர்மல்குமார் இயக்கி வருகிறார். ''தனி ஒருவன்' வெற்றிக்கு பின்னர் மீண்டும் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தியுள்ள அரவிந்தசாமிக்கு இந்த படம் மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2:

Imsai Arasan 24am Pulikesi

இரண்டு வித்தியாசமான வேடங்களில் வடிவேலு நடிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக குழந்தைகளின் விருப்பத்திற்குரிய படமாக இருந்ததால் குடும்ப ஆடியன்ஸ்கள் குவிந்தனர். இந்த நிலையில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் அதே சிம்புதேவன், ஷங்கர், வடிவேலு கூட்டணியில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

திருட்டுப்பயலே 2:

Thiruttupayaley 2

சுசிகணேசன் இயக்கத்தில் ஜீவன், அப்பாஸ், சோனியா அகர்வால், மாளவிகா நடித்த த்ரில் வெற்றி படமான 'திருட்டுப்பயலே' தற்போது இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் பாபிசிம்ஹா, பிரசன்னா, அமலாபால், உள்பட பலர் நடித்து வருகின்றனர். முதல் பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கின்றது

ராஜதந்திரம் 2:

Rajathanthiram 2

வீரபாகு, ரெஜினா, தர்புகா சிவா நடிப்பில் ஏஜி அமித் இயக்கிய ராஜதந்திரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த உற்சாகத்தில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் வீரபாகு, தர்புகாசிவா, அஜய்பிரசாத் உள்பட பலர் நடித்து வருகின்றனர். செந்தில் வீராசாமி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழ்ப்படம் 2:

TamilPadam 2

திரையுலகினர்களை கேலி, கிண்டல் செய்யும் வகையில் சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கிய இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சிவா-அமுதன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தில் ஓவியா நாயகியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

தற்போது தயாராகி வரும் மேற்கண்ட அனைத்து இரண்டாம் பாக திரைப்படங்களும் அடுத்த ஆண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கோலிவுட்டை பொருத்தவரையில் 2018ஆம் ஆண்டு இரண்டாம் பாக ஆண்டு என்று கூறினால் அது மிகையாகாது.

தமிழ் சினிமாவில் தலையெடுத்து வரும் இரண்டாம் பாக சீசன்