சத்யராஜின் சலிக்காத திரைப்படங்கள்

Sathyaraj

புரட்சி தமிழன் சத்யராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர, ஹீரோ நடிப்பில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி அதை இன்றளவும் கடைபிடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. வில்லனாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக இருக்கும் சத்யராஜின் பல படங்கள் சாதனை செய்துள்ள நிலையில் தற்போது அவற்றில் ஒருசில திரைப்படங்களை பார்ப்போம்

கடலோர கவிதைகள்:

Sathyaraj

'சட்டம் என் கையில்' படத்தில் தொடங்கி சுமார் பத்து வருடங்களாக வில்லன் நடிப்பில் அசத்தி வந்த சத்யராஜ், முழுநேர ஹீரோவாக புரமோஷன் பெற்ற படம் இது. ஏற்கனவே இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் 'முதல் மரியாதை' படத்தில் அவர் கொடுத்த அசத்தலான நடிப்பு காரணமாக இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். யாருக்கும் அடங்காத முரட்டு ரெளடி ஒரு பெண்ணின் காதலால் எப்படி சாதுவாக மாறினார் என்பதை குறிப்பிடும் இந்த படத்தில் இருவேறுபட்ட நடிப்பை சத்யராஜ் வெளிப்படுத்தியிருந்தார்.

என் பொம்முகுட்டி அம்மாவுக்கு:

Sathyaraj

பிரபல மலையாள இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சத்யராஜ் ஒரு அமைதியான கேரக்டரில் நடித்திருப்பார். அதுவரை சத்யராஜ் என்றாலே காமெடி, கலாட்டா, நக்கல், நய்யாண்டி என்று இருந்த நிலையில் முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தலைவராக, மகள், மனைவியிடம் பாசத்தை பொழியும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். சத்யராஜின் திரையுலக வாழ்வில் இந்த படம் ஒரு மைல்கல்.

வால்டர் வெற்றிவேல்:

Sathyaraj

ஒவ்வொரு நடிகருக்கும் கம்பீரமான போலீஸ் கேரக்டர் உள்ள ஒரு மறக்க முடியாத படம் இருக்கும். தங்கப்பதக்கம், மூன்று முகம், காக்கி சட்டை, சேதுபதி ஐபிஎஸ் வரிசையில் சத்யராஜூக்கு மறக்க முடியாத போலீஸ் கேரக்டர் என்றால் இந்த படம் தான். இதற்கு பின்னர் அவர் பல படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தாலும் இந்த படம் அவருக்கு பெருமையை சேர்த்த படங்களில் ஒன்று

அமைதிப்படை:

Sathyaraj

தமிழ் சினிமாவில் இன்று வரை இதைவிட சிறந்த ஒரு அரசியல், நக்கல் கலந்த படம் வெளிவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணி இணைந்தாலே கலக்கலான படங்கள் வெளிவந்த காலத்தில் உருவான படங்களில் ஒன்று.

வில்லாதி வில்லன்:

Sathyaraj

சத்யராஜ் இயக்கத்தில் முதன்முதலாக மூன்று வேடங்கள் ஏற்று நடித்த படம். சிவாஜி, கமல், ரஜினியை இந்த மூன்று கேரக்டர்களை ஞாபகப்படுத்தினாலும், அதிலும் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி முயன்றவரை மூன்று வேடங்களை வித்தியாசப்படுத்தியிருப்பார்.

பெரியார்:

Sathyaraj

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க விரும்பி, கடைசி வரை நிறைவேறாத வேடம் தந்தை பெரியார் வேடம் தான். சிவாஜிக்கு கூட கொடுத்து வைக்காத இந்த வேடம் சத்யராஜூக்கு கிடைத்ததே ஒரு பெருமை என்று இருக்க மிகப்பொருத்தமாக அவருக்கு அந்த வேடம் பொருந்தியது அதைவிட பெருமை. காலத்தால் அழியாத மிகச்சிறந்த வரலாற்று திரைப்படங்களில் இதுவும் ஒன்று

நண்பன்:

Sathyaraj

தளபதி விஜய்யுடனும், பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடனும் முதல்முதலில் இணைந்து இந்த படத்தில் பணியாற்றிய சத்யராஜ், ஒரு கண்டிப்பான பேராசிரியர் கேரக்டரில் நடித்திருப்பார். விஜய், இலியானா, ஷங்கர் ஆகியோர்களையும் தாண்டி சத்யராஜின் கேரக்டர் மனதில் பதியும் வகையில் இருப்பதற்கு காரணம் அவரது நடிப்பே.

தலைவா:

Sathyaraj

தளபதி விஜய்யுடன் மீண்டும் இணைந்து சத்யராஜ் நடித்த படம். மும்பை டான் ஆக இதற்கு முன்னர் பலர் நடித்திருந்தாலும் இயக்குனர் விஜய் இந்த படத்தில் சத்யராஜின் இன்னொரு பரிணாம நடிப்பை வெளிப்படுத்த காரணமாக இருந்தார்

ராஜா ராணி:

Sathyaraj

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு தந்தையாக இந்த படத்தில் சத்யராஜ் நடித்தார் என்று சொல்வதைவிட தந்தையாக வாழ்ந்தார் என்றே சொல்லலாம். இப்படி ஒரு அப்பா நமக்கு இருக்க மாட்டாரா? என்று அனைவரும் ஏங்கும் வகையில் இயக்குனர் அட்லி இந்த கேரக்டரை உருவாக்கியிருப்பார்.

பாகுபலி:

Sathyaraj

எஸ்.எஸ்.ராஜமெளலியின் இந்த பிரமாண்டமான படத்தில் கட்டப்பா கேரக்டருக்கு சத்யராஜை தவிர பொருத்தமான நடிகர் இந்தியாவிலேயே இல்லை என்று கூறும் அளவுக்கு அவரது நடிப்பு பிரம்மாதமாக இருந்தது. பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என ரசிகர்களை சுமார் இரண்டு வருட காலம் ரசிகர்களை காக்க வைத்ததே இந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

Sathyaraj:

உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தில் சத்யராஜின் கட்டப்பா கேரக்டரின் இரண்டு வருட புதிருக்கு விடை தெரிந்த படமாக அமைந்தது. பாகுபலியை கொலை செய்துவிட்டு தவிக்கும் தவிப்பு, தப்பு செய்துவிட்டீர்கள் தாயே என்று ராஜமாதாவிடம் கூறுவது, இறுதியில் போர் காட்சிகளில் உள்ள கம்பீரம் என படம் முழுவதும் பிரபாஸூக்கு அடுத்த இடத்தை பெற்றார் சத்யராஜ் என்றால் அது மிகையில்லை

மேற்கண்ட சில படங்கள் அவரது நடிப்பிற்கு தந்த ஒருசில உதாரணங்களே. பெரும்பாலான வெற்றி படங்களை கொடுத்த சத்யராஜின் சாதனை இன்னும் ஏராளம். தற்போது விஜய்யின் 'மெர்சல்' உள்பட இன்னும் ஒருசில படங்களில் நடித்து கொண்டிருக்கும் சத்யராஜ், மேலும் பல வெற்றிகளை குவிக்க இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறோம்

சத்யராஜின் சலிக்காத திரைப்படங்கள்