ரஜினிகாந்த் வெறும் அம்புதான். அவரை யாரோ இயக்குகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த்
துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசி பத்து நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டபோதிலும் ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் இந்த விஷயத்தை விடுவதாக இல்லை. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக சில அரசியல் தலைவர்கள் இந்த விஷயத்தை பேசி தங்கள் பெயர் ஊடகங்களில் வரும்படி செய்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இடம் பெறுபவர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ரஜினி-பெரியார் பிரச்சனை குறித்து கூறியதாவது: தந்தை பெரியார் யார் என்பது தமிழகம் மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே தெரியும். 50 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சி குறித்து பேசி தற்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. பெரியார் குறித்த பேச்சை ரஜினி காந்த் தவிர்த்திருக்கலாம்.
பெரியார் பெண்களுக்காக புரட்சிக்கரமான கருத்துகளை கூறி சரித்திரம் படைத்துள்ளார். அவரை பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. துக்ளக் விழாவிற்கு சென்ற ரஜினிகாந்த் அந்த பத்திரிகை குறித்து மட்டும் பேசியிருக்க வேண்டும். ரஜினிகாந்த் வெறும் அம்புதான். அவரை யாரோ இயக்குகிறார்கள். இது போன்ற பேச்சுகளை இனிமேலாவது அவர் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேட்டியில் கூறியுள்ளார்.