சிகான் ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்: பவன் கல்யாண் அறிக்கை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் மற்றும் கராத்தே மாஸ்டர் ஹூசைனி இன்று காலமானார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தெலுங்கு நடிகர் மற்றும் ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிகான் ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். தற்காப்புக் கலைஆசிரியரின் மரணம் மனவேதனை அளிக்கிறது. புகழ்பெற்ற தற்காப்புக் கலை மற்றும் வில்வித்தை பயிற்றுவிப்பாளர் ஷிஹான் (சிகான்) ஹுசைனி காலமானார் என்பதை அறிந்து நான் மன வேதனை அடைந்தேன். நான் அவரிடம் கராத்தே பயிற்சி பெற்றேன். தற்காப்புக் கலை குரு ஹுசைனி உடல்நிலை சரியில்லாமல் இருப்பது நான்கு நாட்களுக்கு முன்பு தான் தெரியவந்தது.
சென்னையில் உள்ள எனது நண்பர்கள் மூலம் விசாரித்து... சிறந்த சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அனுப்ப வேண்டி இருந்தால், நான் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வேன் என்று கூறினேன்.இந்த மாதம் 29 ஆம் தேதி சென்னை சென்று ஹுசைனியை பார்க்க முடிவு செய்துள்ளேன். இதற்கிடையில், அவரின் இறப்பு செய்தியை கேட்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஹுசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சென்னையில், ஹுசைனி மிகவும் கடுமையான விதிகள் மற்றும் விதிமுறைகளுடன் கராத்தே கற்றுக் கொடுத்தார். அவர் சொன்னதை நான் 100% பின்பற்றுவேன். முதலில், அவர் கராத்தே கற்பிக்க ஒப்புக்கொள்ளவில்லை. "நான் தற்பொழுது யாருக்கும் பயிற்சி அளிப்பதில்லை. என்னால் உனக்கு பயிற்சி அளிக்க முடியாது” என்று அவர் கூறினார். ஆனால், விடாமுயற்சியாக நான் பலமுறை வேண்டிய பிறகு, அவர் ஒப்புக்கொண்டார். நான் அதிகாலையில் சென்று மாலை வரை அவருடன் தங்கி, கராத்தேவில் “Black Belt” பெற பயிற்சி பெற்றேன்.
அப்போது நான் கற்ற பாடங்கள் அனைத்தும், நான் “தம்முடு” படத்தில் கிக் பாக்ஸராக நடிக்க பெரிதாக உதவியது. ஹுசைனியின் பயிற்சியின் கீழ் சுமார் மூவாயிரம் பேர் Black பெல்ட் பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் வில்வித்தை விளையாட்டை பிரபலப்படுத்த ஹுசைனி பாடுபட்டார். அவர் THE ARCHERY ASSOCIATION OF TAMIL NADU (TAAT)ல் முக்கியமான பொறுப்புகளை வகித்தார்.
ஹுசைனியின் திறமைகள் தற்காப்புக் கலைகள் மற்றும் வில்வித்தை ஆகிய துறைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவர் ஒரு பன்முக திறமைசாலி. அவர் இசையில் தேர்ச்சி பெற்றவர். நல்ல ஓவியர் மற்றும் சிற்பி. அவர் பல படங்களில் நடித்தார். அவர் ஊக்கமளிக்கும் உரைகளை வழங்கினார்.
சென்னை ரோட்டரி கிளப் மற்றும் பிற மாநாட்டு அரங்குகளில் உரை நிகழ்த்த செல்லும் போது என்னை தன்னுடன் அழைத்துச் செல்வார். பன்முகத் திறமை கொண்ட ஹுசைனி, இளைஞர்களுக்கு தற்காப்புக் கலைகளை இன்னும் எளிதாகக் கிடைக்க செய்ய விரும்பினார். அவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்படும் என்ற அறிவிப்பு அவரது நல்ல மனநிலையை வெளிப்படுத்தியது.
ஹுசைனியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com