ரஜினியின் அதிசயம்-அற்புதம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கமல்ஹாசனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது, 'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் தமிழக அரசு குறித்தும் ஒரு கருத்தை தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு நான்கு அல்லது ஐந்து மாதங்களில் கவிழ்ந்து விடும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதிசயம், அற்புதம் நடந்தது என்றும், அவரது ஆட்சி தொடர்ந்து நீடித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இதே அதிசயம் எதிர்காலத்திலும் நடக்கும் என்றும் அவர் மறைமுகமாக தன்னுடைய அரசியல் வருகையை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ரஜினிகாந்தின் அதிசயம் அற்புதம் குறித்த கருத்துக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தற்போது பதில் அளித்துள்ளார். அதிசயம், அற்புதத்தை ரஜினி வேண்டுமானால் நம்பலாம். ஆனால் நாங்கள் நம்பியிருப்பது வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களை தான் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி ஏற்படும் என்பதை அதிசயம் என ரஜினி கூறியிருக்கலாம் என்று தெரிவித்தார். அமைச்சர் ஜெயகுமாரின் இந்த கருத்தை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.