நடிகை மீனா: குழந்தை நட்சத்திரம் முதல் குடும்ப கேரக்டர் வரை....

Meena

கோலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோ, ஹீரோயின் வரை ஜொலித்தவர்கள் மிகச்சிலரே. கமல்ஹாசன், ஷாலினி உள்பட மிகச்சிலரே உள்ள இந்த பட்டியலில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் நடிகை மீனா. சிவாஜி கணேசன் நடித்த 'நெஞ்சங்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன நடிகை மீனா அதன்பின்னர் ரஜினியுடன் 'எங்கேயோ கேட்ட குரல்'. 'அன்புள்ள ரஜினிகாந்த்', உள்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இந்த நிலையில் 'ஒரு புதிய கதை' என்ற படத்தின் மூலம் நாயகியாக தமிழில் அறிமுகமானாலும், அவருக்கு முதன்முதலில் புகழ் வாங்கி கொடுத்த படம் ராஜ்கிரணின் 'என் ராசாவின் மனசில' படம் தான். இன்று நடிகை மீனா தனது 40வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்து கூறிக்கொள்வதுடன் அவர் நடித்த முக்கிய படங்கள் குறித்து பார்ப்போம்

அன்புள்ள ரஜினிகாந்த்:

Meena

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இந்த படத்தில் மீனா குழந்தை நட்சத்திரமாக, படம் முழுவதும் வரும் 'ரோஸி' என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ரஜினியுடன் ஒரு பாடலும் இவருக்கு உண்டு. 'கருணை இல்லம்' ஒன்றில் உயிருக்கு போராடி வரும் மாற்றுத்திறனாளி கேரக்டரில் மிக அபாரமாக சிறுவயதிலேயே தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்

என் ராசாவின் மனசிலே

Meena

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக மீனா, சோலையம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ராஜ்கிரணை பார்த்தாலே பயப்படும் ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணாக மீனா இந்த படத்தில் நடித்திருந்தார்

எஜமான்:

Meena

ரஜினியுடன் 'அன்புள்ள ரஜினிகாந்த், 'எங்கேயோ கேட்ட குரல்' ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, அவருக்கு ஜோடியாக நடித்த முதல் படம். வைத்தீஸ்வரி என்ற கேரக்டரில் மிக அழகாக நடித்த மீனாவுக்கு இந்த படத்தின் மூலம் தமிழக அரசின் சிறந்த நடிகை விருது கிடைத்தது

வீரா:

Meena

ரஜினியுடன் மீண்டும் நடித்த காதல் மற்றும் காமெடி படமான இந்த படத்தில் ரஜினியின் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடித்தவர் ரோஜா என்பது குறிப்பிடத்தக்கது

நாட்டாமை:

Meena

சரத்குமார் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய சூப்பர் ஹிட் படமான இந்த படத்தில் மீனா முதல் பாதியில் பணத்திமிர் கேரக்டரிலும் பின்னர் இரண்டாம் பாதியில் பாசத்தை கொட்டும் கேரக்டரிலும் தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்

பாரதி கண்ணம்மா:

Meena

சேரன் இயக்கிய முதல் படமான இந்த படத்தில் மீனா, பார்த்திபனுக்கு ஜோடியாக கண்ணம்மா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி உருக வைக்கும் அளவுக்கு இருந்தாலும் இந்த படம் ஒருசில பிரச்சனை காரணமாக தமிழகத்தின் தெற்கு பகுதியில் வெளியாகவில்லை. ஆனாலும் மீனாவுக்கு இந்த படத்தின் மூலம் தமிழக அரசின் சிறந்த நடிகை விருது கிடைத்தது.

அவ்வை சண்முகி:

Meena

கமல்ஹாசனுடன் மீனா நடித்த முதல் படம். கமல்ஹாசன் மனைவியாகவும், பின்னர் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து பின்னர் மீண்டும் இணையும் ஜானகி என்ற கேரக்டரில் மீனா நடித்திருந்தார்

சிட்டிசன்:

Meena

தல அஜித்துடன் மீனா நடித்த முதல் படம். பிளாஷ்பேக் காட்சியில் சில நிமிடங்கள் மட்டுமே மீனா வரும் காட்சி இருந்தாலும் அழுத்தமான கேரக்டரில் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார்

த்ரிஷ்யம்:

Meena

மலையாள படமாக இருந்தாலும் மீனாவை பற்றிய கட்டுரையில் இந்த படம் இடம்பெறவில்லை என்றால் இந்த கட்டுரை முழுமை அடையாது. மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்த இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்த படம் ஆகும். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் மீனாவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குசேலன்:

Meena

ரஜினிகாந்த், பசுபதி நடிப்பில் பி.வாசு இயக்கிய இந்த படத்தில் மீனா, பசுபதிக்கு ஜோடியாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாக குடும்பப்பாங்கான கேரக்டரில் நடித்தார்.

Meena

மேலும் தளபதி விஜய்யுடன் மீனா ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் 'ஷாஜஹான்' படத்தில் இருவரும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார்கள். மேலும் மீனாவின் மகள் நைனிகா, விஜய் நடித்த 'தெறி' படத்தில் அவருடைய மகளாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகை மீனா தற்போது மோகன்லால் நடித்து வரும் மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். அவர் மேலும் தமிழிலும் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை.

நடிகை மீனா: குழந்தை நட்சத்திரம் முதல் குடும்ப கேரக்டர் வரை....