குடும்பஸ்தன்- திரை விமர்சனம்
சொந்தங்களுக்காக சுமைதாங்கும் ஆண்களுக்கு சமர்ப்பணம்
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி மேகண்ணா, பாலாஜி சக்திவேல், சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்திருக்குபடம் ‘குடும்பஸ்தன்’ .
ஒரு விளம்பர கம்பெனியில் டிசைனராக வேலை செய்யும் நவீன் ( மணிகண்டன்) , ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்தது முதல் குடும்பத்தில் இவருக்கான நெருக்கடிகளும் பிரச்சனைகளும் ஆரம்பிக்கிறது. தன்னையே நம்பி வந்த காதல் மனைவி வெண்ணிலா ( சான்வி மேகன்னா) ஒரு பக்கம் இன்னொரு புறம் வீட்டை பராமரித்து கொடு என்கிற அப்பா, ஆன்மீக சுற்றுலா போக வேண்டும் என ஆசைப்படும் அம்மா, எப்போது நவீன் கீழே விழுவான் என எதிர்பார்த்து கைதட்டக் காத்திருக்கும் அக்காவை கட்டிக்கொண்டு வந்த பந்தா ஐடி மாமா ( குரு சோமசுந்தரம்), மற்றும் உறவினர்கள். இவர்களுக்கு மத்தியில் ஒரு மிடில் கிளாஸ் இளம் குடும்பஸ்தனாக தத்தளிக்கிறார் நவீன். சின்னச் சின்ன பிரச்சனைகள் சொதப்பல்கள், வரவேண்டிய பணம் இழுத்தடிப்பு என பலவாறு பிரச்சனைகளை சந்திக்கிறார். முடிவு என்ன என்பது மீதிக்கதை.
மிடில் கிளாஸ் இளைஞர்களின் போராட்டமான சூழலை எடுத்து வைக்க மணிகண்டனைத் தவிர யாராலும் முடியாது என்றாலும் மிகையாகாது. அந்த அளவிற்கு குடும்பத்தில் மாட்டிக் கொண்டு தவிப்பதும் தன்னைத்தானே தேற்றிக் கொள்வதும், என முந்தைய படங்களிலும் சரி இப்போதும் சரி திரை முழுக்க தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார். எந்த மீட்டரில் எப்படி நடித்தால் சீரியஸ் காட்சியிலும் பார்வையாளர்கள் சிரிப்பார்கள், நகைச்சுவையான காட்சிக்கும் எமோஷனல் ஆவார்கள் என தெரிந்து உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியவர்.
குளியலறையில் நின்று கொண்டு ' இவ்ளோ பெரிய பிரச்சனை, இவ்வளவு ஈஸியா முடிச்சுட்டாடா. நீ சூப்பர் டா' என தன்னைத்தானே பாராட்டிக் கொள்ளும் இடங்களில் அரங்கம் சிரிப்பலைகளில் நிறைகிறது.
அவருக்கு கொஞ்சமும் சளைக்காதவராய் நிற்கிறார் சான்வி மேகண்ணா. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ஒவ்வொரு காட்சியையும் தனது கேரக்டரையும் புரிந்து கொண்டு மிக அற்புதமான நடிப்பை கொடுத்திருப்பது ஆச்சர்யம். கண்களில் ஏக்கமும் , எதிர்பார்ப்பும், மாமியாரிடம் முறுக்கிக் கொண்டு செல்லும் மருமகளாகவும் என பல இடங்களில் அப்ளாஸ் பெறுகிறார். தமிழுக்கு நல்வரவு.
குரு சோமசுந்தரம்... குடைச்சல் கொடுக்கும் ஒரு அக்கா கணவர் வீட்டில் இருந்தால் எப்படி இருப்பார் என்பதை அச்சு அசலாக காட்டியிருக்கிறார் குரு சோமசுந்தரம். இதற்கு முன்பு இவர் நடித்த படங்களில் இருந்து இந்த படத்தில் முற்றிலுமான வேறு ஒரு நடிப்பு. சுந்தர்ராஜன், நக்கலைட்ஸ் குழு, பாலாஜி சக்திவேல் என ஒவ்வொருவருமே அவர்களின் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரமாக நடித்திருக்கிறார்கள் என்றே கூறலாம். ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் படம் முடிந்த பிறகும் மனதில் நிற்கிறது.
சுஜித் எம். சுப்பிரமணியம் கேமராக்களில் கோயமுத்தூரில் இன்னொரு யதார்த்த அழகியல் படம் முழுக்க பயணிக்கிறது. கண்ணன் பாலு படத்தொகுப்பில் முன்பாதி முழுக்க படு விருவிருப்பு. மேலும் காட்சிகளிலும் அத்தனை பரபரப்புகள் இருப்பினும் நின்று நிதானமாக சிரிக்க வைக்கவும் அவரது எடிட்டிங் தவறவில்லை.
வைசாக் இசையில் 'ஜீரோ பேலன்ஸ் ஹீரோ ...' பாடல் நிச்சயம் ஒவ்வொரு குடும்பஸ்தனையும் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பத்து தலைவனையும் கண்முன் கொண்டு வரும்.
நாடி நரம்புகள் எல்லாம் ஒரு குடும்ப சுமையை தாங்கிப் பிடித்த ஒருவனால் மட்டுமே இப்படி ஒரு கதையை உருவாக்க முடியும் . அந்த அளவிற்கு இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி ஒவ்வொரு வீட்டு தலைவனின் ஒட்டுமொத்த குரலாக திரைக்கதை அமைத்திருக்கிறார் 'உன்ன கட்டிக்கிட்டு என்ன சுகத்தை கண்டேன், இதை வாங்கிக் கொடு அதை வாங்கிக் கொடு என நச்சரிக்கும் குழந்தைகள், உங்க அப்பனாலும் எனக்கு எந்த பயனும் இல்லை உன்னாலயும் எனக்கு எந்தப் பயனும் இல்லை என சலித்துக் கொள்ளும் அம்மாக்களுக்கும் சரி இந்தப்படம் மிகப்பெரிய பாடம். ஒவ்வொரு உழைக்கும் ஆணும் சரி அதுவும் இக்காலத்தில் பெண்களும் கூட இந்த பணத்தால் நசுக்கப்படும் சூழலை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி இருப்பவருக்கு ஆறுதலாகவே இந்த படம் இருக்கும். முன் பாதியில் பலதரப்பட்ட விஷயங்களை பேசிய கதைக்களம் பிற்பாதையில் பணமில்லை என்கிற ஒரே ஒரு விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு ஓடுவது மிகச் சில இடங்களில் சற்று சலிப்பு ஊட்டுகின்றன. மேலும் கடன் மற்றும் காசு அதைச் சார்ந்த தொழில் இதற்குள் சுற்றுகிறது கதை. இதை சற்று குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் ஒவ்வொரு குடும்பஸ்தனின் கூக்குரலும் அழுகையுமாக வெடித்து நின்று அளவுக்கு மீறி ஆசைப்பட்டு வீட்டில் சம்பாதிக்கும் ஒருவரை நசுக்கும் குடும்பங்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய பாடம்.
Rating: 3.75 / 5.0
Showcase your talent to millions!!
മലയാളം Movie Reviews






Comments