close
Choose your channels

கிருஷ்ணாவின் 'பண்டிகை' திரை முன்னோட்டம்

Sunday, July 9, 2017 • தமிழ் Comments

அலிபாபா', 'கழுகு', 'யட்சன்' உள்பட பல படங்களில் நடித்தவரும் இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரருமான கிருஷ்ணா நடித்துள்ள அடுத்த படம் 'பண்டிகை'. தேசிய விருது பெற்ற முதல் தமிழ் இயக்குனர் என்ற பெருமையுடைய அகத்தியன் அவர்களின் மகளும் நடிகையுமான விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அவருடைய கணவர் பெரோஸ்' இயக்கியுள்ளார்.
கிருஷ்ணா, ஆனந்தி, நிதின் சத்யா, கருணாஸ், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு R.H.விக்ரம் என்பவர் இசையமைத்துள்ளார். அரவிந்த் ஒளிப்பதிவில் பிரபாகர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஜூலை 14ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தில் விஜயலட்சுமி ஒரு பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் குறித்து இயக்குனர் பெரோஸ் கூறியபோது, 'இந்த படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு பலர் இந்த படம் 'ஃபைட் கிளப்' படத்தின் காப்பி என்று கூறுகின்றனர். ஆனால் இந்த படம் சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. சென்னை அண்ணா நகரில் நான் பார்த்த இரண்டு கேங் சண்டை குழுக்கள்தான் இந்த படத்தின் கதைக்கு இன்ஸ்பிரஷன். இந்த கேங் குழுக்கள் நடுரோட்டில் சண்டை போடுவார்கள். பின்னர் திடீரென சண்டையை முடித்துவிட்டு நண்பர்களாக தோளின்மீது கைபோட்டு கிளம்பிவிடுவார்கள். நான் நேரில் பார்த்த இந்த விஷயத்தை தான் படத்தில் பயன்படுத்தியுள்ளேன். எனவே இந்த படம் 'பைட் கிளப்' படத்தின் காப்பி அல்ல' என்று கூறினார்.
இந்த படத்தை தயாரித்த அனுபவம் குறித்து விஜயலட்சுமி கூறியபோது, 'நான் நடிக்க போகிறேன் என்று சொன்ன போது என் குடும்பம் உட்பட எல்லோரிடத்திலும் எனக்கு ஆதரவு இருந்தது. ஆனால், படம் தயாரிக்கப் போகிறேன் என்றதும் எல்லோரும் வேண்டாம் என அறிவுரை கூறினர். கிருஷ்ணா என் நண்பன், படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறான். கேரவன் கூட போகாமல் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களிடையே ஒரு பெரிய போட்டியே இருந்தது. ஒவ்வொருவரும் சிறப்பான, தரமான படமாக கொடுத்திருக்கிறார்கள். எங்களை விட ஆரா சினிமாஸ் மகேஷ் தான் மிகவும் தன்னம்பிக்கையோடு உழைத்து வருகிறார். இந்த படம் ரிலீஸுக்கு பிறகு இன்னும் 4 படங்கள் தயாரிக்க ஆசை` என்று தயாரிப்பாளர் விஜயலஷ்மி கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz