close
Choose your channels

அச்சமூட்டும் கொல்லிமலையும் அதன் ஆன்மீக வரலாறும்

Saturday, February 22, 2020 • தமிழ் Comments

கொல்லிமலை என்று சொன்னாலே நம்மையும் அறியாமல் ஒரு அச்சம் உள்ளூறத் தொற்றி கொள்வது இயல்புதான். இயற்கை ஒரு பக்கமும் பில்லி, சூனியம், சித்தர்கள், அமானுஷ்யம் என்று மற்றொரு பக்கமுமாக இந்தப் பிரம்மாண்டத்தின் வரலாறு இன்றைக்கு நேற்றைக்கு வந்தது அல்ல. ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதர்கள் முதற்கொண்டு இந்த மலையில் ஒரே முறையிலாக வாழ்க்கைதான் தொடர்கிறது என்பதே விந்தை.

இலக்கியங்களில் கொல்லிப் பாவை

“கொல்லிப் பாவை பாதுகாக்கின்ற இந்தக் கொல்லி மலை, பரந்து விரிந்து ஒளிப்பரப்புவது போல உனது அழகும் ஒளிப்பொருந்தியதாக இருக்கிறது” எனக் காதலன் தனது காதலியிடம் கூறுவதாக ஒரு காட்சி (நற்றிணை 192) பாடலில் இடம் பெறும். மேலும், அழகு பொருந்திய பாவை (கலி. 56) அழியாத கொல்லிப் பாவை (நற். 201) இப்படி அழகுக்குக்கும் அச்சத்துக்கும் சங்க இலக்கியம் முதற்கொண்டு பல இலக்கியங்களில் கொல்லி மலையைப் பற்றியும் அதைக் காக்கின்ற கொல்லி பாவையைப் பற்றியும் செய்திகள் குவிந்து கிடக்கின்றன.

”கொல்லிப் பாவை, யாரையாவது நேரில் பார்த்தால், தன் கண்களாலேயே அச்சுறுத்தி கொன்று விடுவாளாம்” இதைக் கேட்கும் போது வேடிக்கையாகக் கூட தோன்றலாம். உண்மையில் இப்படித்தான் நமது பண்டையத் தமிழர்களும் நினைத்திருக்கிறார்கள். இயற்கைக்கு தன்னை விட அதீத சக்தி இருப்பதாக நினைத்த பண்டைய தமிழர்கள் ஒவ்வொரு இயற்கை சக்திக்கும் ஒரு வித ஆற்றல் இருப்பதாக எண்ணியிருக்கின்றனர். மலைக்கு பக்கத்தில் போனால் அணங்கு (ஒரு பெண் தெய்வம்) வந்து அச்சுறுத்தி பயத்தை ஏற்படுத்தி விடும். அதே போல அடர்ந்த காடு, பொய்கை (குளம்) போன்ற இடங்களில் எல்லாம் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சக்தி இருப்பதாகவும் நினைத்திருக்கின்றனர்.

உண்மையில் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்ற எந்த ஒரு சக்தியும் மத அடிப்படையிலானது அல்ல. இயற்கையைப் பார்த்து பயந்த மனிதனின் பதிவுகளாகத் தான் அவை இடம் பெற்றிருக்கின்றன. 2 ஆயிரம் காலத்திற்கு முன்பு எழுதப்பட்ட இலக்கியத்தில் காணப்பட்ட அதே கொல்லித் தெய்வம் இன்றைக்கும் கொல்லி மலையைக் காப்பாற்றுவதாக மக்கள் நம்புகின்றனர். அதோடு அப்பகுதியில் கோரக்கர் என்ற சித்தர் வல்வில் ஓரி மன்னன் காலத்தில் இருந்து இன்றைக்கு வரைக்கும் அந்த மலைப் பகுதியில் வாழ்ந்து வருவதாகவும் நம்பப் பட்டு வருகிறது. கோரக்கர் மட்டுமல்லாது கொல்லி மலையில் பல்வேறு சித்தர்கள் வாழ்ந்ததாகவும் அவர்கள் இன்றைக்கும் அந்தப் பகுதியில் நடமாடுவதாகவும் நம்பப் படுகிறது.

மலையின் சிறப்புகள்

வருடம் முழுவதும் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்ற தோற்றம், ஐந்து அருவிகள் ஒன்று சேர்ந்து 180 அடியில் இருந்து விழும் ஆகாய கங்கை, மலைப் பாம்பு நீட்டி நெளிந்து படுத்து இருப்பது போல 78 கொண்டை ஊசி வளைவுகள், கடல் மட்டத்தில் இருந்து 1,300 அடி உயரம் 250 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு என பிரம்மாண்டமான தோற்றம், ஆள் நடமாட்டம் இல்லாத அமைதி, கரடிகளும் பாம்புகளும் அதிகமாக உலாவித் திரியும் இயற்கை என இதன் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த மலைகளில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல அரிய வகை மூலிகைகள் விளைந்து வருகின்றன. இந்த மூலிகைகள் ஐந்து அருவிகளின் நீரில் கலந்து மருத்துவம் குணம் வாய்ந்ததாக மாறுகிறது என நம்பப் படுகிறது. இதற்காகவே பல சுற்றுலா பயணிகள் இந்த கொல்லி மலைக்கு வருகை தருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும், ஏலம், சீரகம், லவங்கம், மிளகு, மா, பலா, அன்னாசி போன்றவை இந்தப் பகுதிகளில் அதிகமாக விளைகிறது. இங்குக் கிடைக்கின்ற மலைத்தேன் மருத்துவக் குணம் கொண்டது எனவும் நம்பப் படுகிறது.

சங்க இலக்கிய கால கட்ட மன்னனான வல் வில் ஓரி தனது ஆட்சிக்காலத்தில் சிவனுக்காக  அறப்பளீசுவரர் ஆலயத்தை எழுப்பியிருக்கிறான். இந்த ஆலயத்தைக் குறித்து மக்களிடம் வேறு விதமான நம்பிக்கையும் உலவுகிறது. கொல்லிமலையில் வாழ்ந்த ஆதிகால மக்கள் உழவுக்காக நிலத்தைப் பண்படுத்தும் போது ஒரு சிவன் சிலை தட்டுப் பட்டதாகவும் அதைச் சிறப்பிக்கும் விதமாக அறப்பளிஸ்வரர் கோவில் கட்டப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

கொல்லிமலையின் மற்றொரு சிறப்பாக எட்டுக்கைக் கோயில் (கொல்லிப்பாவை) நம்பப் படுகிறது. சாமியாடுவது, குறி சொல்வது, சத்தியம் செய்வது, தவறு செய்தவர்களை கொல்லி தண்டிப்பாள் என நம்புவது என இன்னும் தனது பழமை மாறாமல் கொல்லித் தெய்வம் சிறப்புடையதாக நம்பப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வல்வில் ஓரி மன்னனுக்கு விழா எடுக்கும் போது அதில் முக்கிய இடம் பெறுபவளாக இந்த கொல்லித் தெய்வமே விளங்குகிறது. கொல்லி என்பதனை பழைய காலத்து கொற்றவை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கொல்லி மலையில் மாசி பெரியசாமி கோவில் என்ற இன்னொரு பயங்கரமான சக்தியும் வழிபடப் படுகிறது. ஊர்ப்புறங்களில் காணப்படுகின்ற முனிஷ்வரனை ஒத்ததுதான் என்றாலும் வழிபாட்டு முறைகள் மிகவும் பயங்கரமாகவே இருக்கிறது. இந்தக் கோவிலில் வேண்டிக் கொண்டு சிலர் உயிருடன் கோழிகளை வேலில் குத்தி வைக்கின்றனர். கோழிகள் எப்படி துடி துடித்து சாகிறதோ அப்படி தங்களுக்கு தீங்கிழைத்தவர்கள்  துடித்து சாக வேண்டும் என்ற நம்பிக்கையில் இத்தகைய வேண்டுதல்கள் நடத்தப் படுகின்றன.

சித்தர்கள் இன்றைக்கும் இந்தப் பகுதிகளில் மூலிகைகளைச் சேகரிப்பதாகவும் நம்பப் படுகிறது. சித்தர்களை கண்டதாகவும் பலர் கூறுகின்றனர். கொல்லி மலைப் பகுதிகளில் சமணப் படுக்கைகளைப்  போன்ற சில குகைகளும் காணப்படுகின்றன என்பதால் இந்த நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது என்றே சொல்லலாம். சித்தர்களுக்கு இரும்பை தங்கமாக மாற்றும் சக்தி இருக்கிறது என பொதுவான ஒரு நம்பிக்கை என்றைக்குமே நிலவுகிறது. அதன்படி கொல்லி மலையில் வாழும் சித்தர்களும் 42 வகையான மூலிகைகளை சேகரித்து இரும்பை தங்கமாக மாற்றுகின்றனர் என்ற நம்பிக்கையும் இந்தப் பகுதியில் காணப்படுகிறது.

கொல்லி மலை பகுதிகளில் சித்தர்கள் அருவமாக எல்லா இடங்களிலும் சுற்றித்  திரிகின்றனர் எனவும் அவர்களின் பாதைகளை தடை செய்ய கூடாது எனவும் அப்பகுதி மக்கள் இன்றைக்கும் எச்சரிக்கையுடனே வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பில்லி, சூனியம், மாந்தீரிகத்திற்கு கேரளா போவதைத்தான் பொதுவாகப் பார்த்திருப்போம். ஆனால் தமிழகத்தின் வடக்குப் பகுதிகளில் இருக்கும் மக்கள் பெரும்பாலும் இந்த நம்பிக்கையில் ஒவ்வொரு அமாவாசை கிழமைகளிலும் இங்கு குவிவதைப் பார்த்தால் உண்மையிலேயே பயங்கரமாகத்தான் இருக்கிறது. அறிவியல் காலக் கட்டங்களிலும் இது போன்ற நம்பிக்கை இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் அந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியலில் இதுவும் ஒரு பகுதியாக மாறிப் போய் இருக்கிறது என்ற சொல்ல வேண்டும்.

சித்தர்களை எல்லோரும் பாத்து விடலாமா என்றால், சித்தர்களை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றே பலர் குறிப்பிடுகின்றனர். அவ்வளவு எளிதாக சித்தர்களை பார்த்து விட முடியாது என்ற நம்பிக்கை இங்கு பரவலாகக் காணப்படுகிறது. கொல்லி மலையின் முகட்டில் கோரக்கரின் முகம் தெரிவதாகக் கூட நம்பப் பட்டு வருகிறது.

கொல்லித் தெய்வம்/ பாவை

பொதுவாக ஒவ்வொரு ஊரின் நடுவிலும் அம்மன் கோவில் வைக்கப் பட்டு இருக்கும். அம்மை நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப் படாத ஒரு காலக் கட்டத்தில் அம்மன் தெய்வத்திற்கு அம்மை நோயைப் போக்குவதற்கான சக்தி இருப்பதாக நம்பப் பட்டது. அந்த நம்பிக்கை இன்றைக்கு உலக நாடுகள் முழுக்க தெய்வ வழிபாடாக தொடர்ந்து கொண்டு வருகிறது. இதே போலத் தான் கொல்லி என்ற தெய்வத்தின் நம்பிக்கையும்.

கொல்லிப்பாவை இந்த மலைப் பகுதிகளில் ஏதேனும் தவறான செயல்களில் ஈடுபடும் போது தண்டித்து விடுவாள் என்று நம்பப் படுகிறது. இந்தப் பயம் தான் கொல்லி மலையில் இன்றைக்கும் இயற்கையைக் காக்க உதவுகிறது என்று கூட சொல்லலாம். வெறுமனே 40 ஆயிரம் பழங்குடியின மக்கள் வாழும் இந்த மலையில் வேறு எந்த நிறுவனங்களோ, பெரிதான வணிகங்களோ இல்லாமல் இயற்கையான வாழ்வியல் முறைகளை மேற்கொள்வதற்கு கொல்லித் தெய்வம் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

கொல்லித் தெய்வம் கொற்றவையாக, சக்தியாக, அம்மனாக பல்வேறு வடிவங்களில் அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு விஷயங்களிலும் பார்க்க முடிகிறது. கொல்லித் தெய்வம் இங்குள்ள மரங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பதாக மக்கள் நம்புவதால் எந்த மரத்தையும், உயிரினத்தையும் அழிப்பதில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

மீனுக்கு மூக்குத்திப் போடுதல்

நோயால் பாதிக்கப் பட்டவர்கள் இங்கு வந்து நீராடும் போதும் கொல்லிப் பாவையை வணங்கும் போதும் நோய் தீர்வதாக நம்புகின்றனர். அதோடு மீன்களுக்கு மூக்குத்திப் போடும் விசித்திரமான பழக்கமும் இங்குள்ள மக்களிடம் காணப்படுகிறது. நோயால் பாதிக்கப் பட்டவர் கொல்லிப் பாவைக்கு வேண்டிக்கொள்வர். நோய் தீர்ந்தவுடன் அங்குள்ள நதியில் ஒரு மீனைப் பிடித்து அந்த மீனிற்கு மூக்குத்தி போட்டு மீண்டும் நதியிலேயே விட்டுவிடுகின்றனர்.

மேலும், பெருங்கற்காலத்து புதைவிடம் ஒன்று இருப்பதாக சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் பதிவு செய்து இருந்தார். சமண சமயத்தை அடையாளப்படுத்துவது போன்று  ஒரு பழைய சிவன் கோவில் இருந்ததாகவும் தனது அனுபவக் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அமானுஷ்யங்கள்

பொதுவாக அடர்ந்த இருண்ட காடுகள் என்றாலே பல்வேறு கதைகளும் அச்சங்களும் நிலவும். அதுவும் சித்தர்கள் வாழ்வதாக கருதப்படும் ஒரு இடத்தில் அதைப் பற்றி நம்பிக்கைகள் கதைகளாக வழங்கப் படுகின்றன.  கொல்லிப் பகுதிகளில் மனிதர்களை உண்ணும் தாவரங்கள் இருப்பதாகவும், தாவரங்களுக்கு அமிலங்களை கரைக்கும் சக்தி இருப்பதாகவும் நம்பப் படுகிறது.

ஆன்மீகவாதிகளின் கருத்துகள்

ஆன்மீக  நோக்கில் கூறும்போது கொல்லி மலைக்கு எந்த நோக்கத்தில் செல்கிறீர்களோ அந்த நோக்கம் நிறைவேறும் எனவும் நம்பப் படுகிறது. கொல்லிப் பாவை பற்றி தவறான அச்சம் கொள்ள தேவையில்லை. மனிதர்கள் தங்களின் அருள் ஆற்றலையோ, உயிர் ஆற்றலையோ வலிமைப் படுத்திக் கொள்வதற்கு கொல்லி மலைக்குச் செல்ல வேண்டும் என ஆன்மீகவாதிகள் அறிவுரை கூறுகின்றனர். கொல்லி மலைக்குச் செல்லும் போது மனம் ஒருமைப்படும். மேலும் இறைவனோடு பிறவாத பெரு நிலையை எட்டுவதற்கு கொல்லிப் பாவை உதவி செய்வாள் என்றும் ஆன்மீகவாதிகள் குறிப்பிடுகின்றனர்.

மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்து தெய்வங்கள் நோய்களை போக்கும் சக்தி கொண்டவை என நம்பப் பட்டு வருகிறது. அந்த நம்பிக்கையின் எச்சத்தையும் கொல்லிப் பாவையின் வடிவில் பார்க்க முடிகிறது. தாயத்து, மந்திரம், தந்திரம் என்று திகிலூட்டும் விஷயங்கள் அங்குக் காணப்பட்டாலும் கொல்லி என்பது நன்மை அளிக்கும் தெய்வமாகவே இன்றைக்கும் நம்பப் பட்டு வருகிறது.

பாகுபலி படத்தில் வரும் நீர்வீழ்ச்சியை மிஞ்சும் அளவிற்கு உண்மையிலேயே ஒரு பெரிய நீர் வீழ்ச்சி, சித்தர்களின் அருள், சாமியாடிகளின் அருள்வாக்கு, இயற்கையின் பரிமணம் , ஆள் அரவம் இல்லாத அமைதி இவை அனைத்தும் கொல்லி மலையைப் பார்க்கும் போதே ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்துவிட்ட நிம்மதியை ஏற்படுத்தி விடுகிறது. கொல்லிப் பாவை என்றும் ஒரு பாதுகாப்புக்கான தெய்வமாக மலையைத் தொடர்ந்து காத்து வருகிறாள். இயற்கை எப்போதும் தன்னை காப்பாற்றிக் கொள்ள ஒரு ஏற்பாட்டையும் வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 

Get Breaking News Alerts From IndiaGlitz