குழப்பும் திரைக்கதையால் கவனம் பெற மறுக்கிறது இந்தக் கடல் பேண்டஸி ' கிங்ஸ்டன் ' !
ஜிவி பிரகாஷ் தயாரிப்பில் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், திவ்யபாரதி, குமரவேல், ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ' கிங்ஸ்டன் '
கடலுக்கு மீன் பிடிக்க சென்றால் உயிருடன் திரும்ப மாட்டோம் என்கிற பீதியுடன் வாழ்கிறது ஒரு கடற்கரை கிராமம். அப்படி மீறிச்செல்லும் பல உயிர்கள் சூறையாடப் பட்டு உடல் மட்டுமே ஒதுங்குகிறது. ஏன் இப்படி அந்த கிராமத்தில் மட்டும் நிகழ்கிறது இதன் பின்னணி காரணம் என்ன , எப்படியாவது இந்த பிரச்சனையை சரி செய்து மீன் பிடித்து தான் திரும்புவோம் வறுமையில் வாடும் கிராமத்தை காப்பாற்றுவோம் என முடிவு செய்து தன் நண்பர்களுடன் படகில் கிளம்புகிறார் கிங்ஸ்டன்( ஜிவி பிரகாஷ் குமார்). முடிவு என்ன என்பது மீதிக் கதை
ஜிவி பிரகாஷ் குமார், வழக்கம்போல அவருடைய வயது தெரியாத தோற்றம் கதைக்கு மிகப்பெரிய அளவில் பலமாக நிற்கிறது. அவரைத் தொடர்ந்து கவனம் பெறுபவர் நடிகர் சேத்தன். சமீபமாக அவர் தேர்வு செய்யும் கேரக்டர் அத்தனையும் மைல்ஸ்டோன் வகையறாக்களாக மனதில் நிற்கின்றன. இந்த கதையிலும் மிகப்பெரிய கருவாக கதையை நகர்த்தி இருக்கிறார். திவ்யபாரதி இந்த கதைக்கு அவ்வளவு முக்கியமா என்கிற கேள்வி எழுகிறது. இருந்தாலும் காதல், ரொமான்ஸ், டூயட் இதெல்லாம் வேண்டுமே என்கிற காரணத்துக்காக வலுக்கட்டாயமாக படகில் ஏற்றி அனுப்பி இருக்கிறார் இயக்குனர். இளங்கோ குமரவேல், அழகம் பெருமாள் , உள்ளிட்டோர் அவர்களுக்கு கொடுத்த பொறுப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒரு லைனில் சொன்னால் புரியக்கூடிய எளிமையான கதை அதற்கு ஏன் திரைக்கதையில் இவ்வளவு குழப்பம் மற்றும் இத்தனை ரகமான பிளாஷ்பேக் என தெரியவில்லை. ஒரே ஃபிளாஷ்பேக் ஆனால் அது ஒவ்வொருத்தர் பார்வையில் வேறு வேறு கதையாக சொல்லப்படுவது மிகப்பெரிய சலிப்பை உண்டாக்குகிறது. படத்தின் விளம்பரங்களில் எல்லாம் கடல் பேண்டஸி திரைப்படம் என சொல்லியதன் விளைவால் படம் துவங்கியது முதலே எப்போது ஃபேண்டஸி ஆரம்பிக்கும், எப்போது பேய் வரும் , நம்மை திகில் ஊட்டும் என எதிர்பார்ப்பிலேயே இடைவேளை வரை காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. போலவே இடைவேளைக்குப் பிறகும் விடாமல் ஹாரர் காட்சிகளுக்கு நடுவே மீண்டும் பிளாஷ்பேக் கதைகளை ஓட்டி உருட்டுகிறார்கள்.
கோகுல் பினாய் ஒளிப்பதிவில் பிளாஷ்பேக் காட்சியில் வரும் கலரிங் டோன், மற்றும் நிகழ் காலத்தில் இருக்கும் கலரிங் டோன் என நிறைய மெனக்கெட்டு இருக்கிறார். கடலில் நிகழும் ஹாரர் காட்சிகள் கண்களுக்கு விருந்து. ஏனெனில் சொற்ப பட்ஜெட்டில் இத்தனை கிராபிக்ஸ் காட்டியதற்கே பாராட்டுகள். குறிப்பாக ஆர்ட் டைரக்ஷன் குழுவுக்கு சிறப்பு பாராட்டு.
சான் லோகேஷ் எடிட்டிங்கில் கூடுமானவரை திரும்பத் திரும்ப வரும் காட்சிகளை இன்னும் குறைத்திருக்கலாம். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் ' ராசா ராசா...' பாடல் ரசிக்க வைக்கிறது. ஆனால் தேவையில்லாத இடத்தில் வைக்கப்பட்டு படத்தின் சுவாரஸ்யம் தடைபடுகிறது. மண்ட பத்திரம் மற்றும் கிங்ஸ்டன் டைட்டில் ட்ராக் பாடல்கள் வித்தியாசமான இசையமைப்பு. கதை எதை சொல்ல முற்படுகிறது, யார் உண்மையில் கயவர் என்பதற்கு பதில் சொல்வதற்குள் நம் கபாலத்தை கலக்குகிறார்கள். முடியல சாமி.
மொத்தத்தில் சலிப்பூட்டும் காட்சிகளை நான் தாங்கிக் கொள்வேன் என்போர் தமிழ் சினிமாவின் முதல் கடல் பேண்டஸி திரைப்படம் எனச் சொல்லப்படும் இப்படத்தை பார்க்கலாம்.
Comments