close
Choose your channels

ஐபிஎல் கதாநாயகர்கள் மோதும் போட்டி - வெற்றியை நோக்கி இரு பெரும் அணிகள்

Wednesday, April 20, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'சர்' ரவீந்திர ஜடேஜாவா அல்லது 'ஹிட்மேன்' ரோஹித் ஷர்மாவா?

நாளை நடைபெறும் ஐபிஎல் 2022 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணியை எதிர்கொள்கிறது, மேலும் இந்த இரண்டு கதாநாயகர்களும் தொடரில் நிலைக்க, கட்டாயமாக இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

ஐபிஎல் வரலாற்றில் இரு பெரும் அரசர்களாக வலம் வந்த சென்னை அணியும், மும்பை அணியும், ஐபிஎல் 2022ல் 9ஆவது இடத்திலும், 10ஆம் இடத்திலும் இருக்கின்றன. இந்நிலையில் நாளை இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக போராடுவார்கள். இந்த போட்டியால் புள்ளி அட்டவணையில் மாற்றம் ஏற்படாமல் இருக்கலாம் ஆனால் இது வெறும் லீக் போட்டியல்ல, ஐபிஎலில் இது இந்தியா பாகிஸ்தான் போட்டி போல. நிறைய அதிரடி, நிறைய அதிர்ச்சி, ஆச்சரியங்களை கொண்ட ஆட்டத்தைத் தான் சென்னை மற்றும் மும்பை அணியின் ரசிகர்களும் பார்க்கப்போகிறார்கள்.

நடப்பு சாம்பியனான சென்னை அணி 6 போட்டிகளில் ஒரு போட்டி மட்டுமே வென்றுள்ளது. மும்பை அணி விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. எனவே இரு அணிகளுக்கும் இது ஒரு முக்கியமான போட்டி. 

இரு அணிகளும் இதுவரை ஐபிஎல்லில் மொத்தம் 32 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. அதில் மும்பை அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, சென்னை 13 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற டி20 போட்டிகளில் சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 736 ரன்களும், ரோஹித் ஷர்மா 693 ரன்களும், எம் எஸ் தோனி 646 ரன்களும் குவித்துள்ளனர். தற்போது இந்த அணிகளில் விளையாடி வரும் பந்து வீச்சாளர்களில், டுவைன் பிராவோ அதிகபட்சமாக 35 விக்கெட்டுகளையும், அவரை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 18 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். 

இந்த இரு அணிகளும் கடைசியாக கடந்த ஐபிஎல் 2021ல் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சந்தித்தபோது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் 

கடந்த போட்டியில் குஜராத்துடன் வென்று தனது வெற்றி பயணத்தை தொடரலாம் என்று விளையாடிய சென்னை அணிக்கு நிறைய அதிர்ச்சிகள் காத்திருந்தது. சுலபமாக வென்றிருக்க வேண்டிய போட்டியை நழுவவிட்டு மீண்டும் இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. 

தொடர்ந்து சொற்ப ரன்களில் வெளியேறிக்கொண்டிருந்த ருதுராஜ் கைக்கவாட் குஜராத் அணியுடன் தனது பார்ம் திரும்பி விட்டது என்று நிரூபித்தார். பொறுமையான தொடக்கத்தை தந்த ருதுராஜ் மெல்ல மெல்ல அதிரடி காட்டத் தொடங்கினார். 48 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸ்ர்கள் உட்பட 73 ரன்கள் விளாசி யாஷ் தாயால் வீசிய பந்தில் அபினவ் மனோஹரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

மிகவும் எதிர்பார்த்த உத்தப்பா வெறும் 3 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். மொயீன் அலியும் தொடர்ந்து சொற்ப ரன்களில் வெளியேறிக்கொண்டிருக்கிறார். அம்பதி ராயுடு எப்பொழுதும் போல நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுகிறார். பின் சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி என்று பேட்டிங் மிகவும் பலமாகத்தான் இருக்கிறது ஆனால் எல்லோருமாக ஒரே போட்டியில் ஒன்றிணைந்து செயல்படவில்லை. ஒரு போட்டியில் ஒருவர் நன்றாக விளையாடுகிறார் என்றால் அடுத்த போட்டியில் சொதப்பி விடுகிறார். 

சென்னையின் பவுலிங் இன்னும் சற்று கவலைக்கிடமாகத்தான் உள்ளது. பிராவோ மட்டும் எல்லா போட்டிகளிலும் தன பணியை சிறப்பாக செய்கிறார். குஜராத் அணியுடன் ஒரு மெய்டன் ஓவர் உட்பட 4 ஓவர்களில் வெறும் 23 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

கடந்த இரு போட்டிகளில் தீக்ஷனா ஒரு நல்ல நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். டெத் பவுலிங் ஸ்பெஷலிஸ்ட் என்றழைக்கப்படும் ஜோர்டன், கடந்த போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்காமல் சொதப்பினார். குஜராத் அணிக்கு எதிராக 18ஆவது ஓவரில் 23 ரன்கள் கொடுத்து வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். முக்கியமாக டேவிட் மில்லரின் கேட்சை சிவம் துபே பிடிக்க தவறியது நமது தோல்விக்கு அடித்தளமாக அமைந்தது. 

இந்த முறை ஜோர்டனுக்கு பதிலாக பிரிட்டோரியசிற்கு வாய்ப்பளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது அல்லது ஆடம் மில்னேவுக்கு வாய்ப்பளித்து பார்க்கலாம். 

மும்பை இந்தியன்ஸ் 

கடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியிலாவது தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் என்று மும்பை அணியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அணியின் பேட்டிங் பலமாகத்தான் உள்ளது ஆனால் ஜஸ்பிரித் பும்ரா போன்று ஒரு நட்சத்திர பவுலரை வைத்து கொண்டு மற்ற பவுலர்கள் சரியாக கை கொடுக்காததால் வெற்றி வாய்ப்பையெல்லாம் நழுவ விட்டுக் கொண்டிருக்கிறது மும்பை அணி.

மும்பை அணி தனது பவுலிங்கை சரி செய்துகொண்டாலே வெற்றி பெறலாம். இந்த போட்டியில் அணியின் பவுலிங் அட்டாக்கில் சில மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம். பேட்டிங்கில் யார் சொதப்பினாலும் சரி சூரியகுமார் யாதவ் எப்பொழுதுமே அணிக்கு ஒரு பெரிய அடித்தளமாக அமைகிறார், மற்ற வீரர்களும் அவருக்கு இணையாக துணை நின்றாலே மும்பை அணி பெரிய ஸ்கோர்களை எட்ட முடியும். 

கேஜிஎப் 2 - பீஸ்ட் போட்டி போல இந்த போட்டிக்கும் ரசிகர்களிடையிலும் பெரும் போட்டி நிலவும். மொத்தத்தில் ஒரு சுவாரசியமான அதிரடி போட்டி நமக்காக நாளை காத்திருக்கிறது. 

நாளை போட்டியில் களமிறங்கக்கூடிய அணிகள்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: 

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (C), சிவம் துபே, எம் எஸ் தோனி (WK), டுவைன் பிராவோ, மகிஷ் தீக்க்ஷனா, கிறிஸ் ஜோர்டன்/ பிரிட்டோரியஸ்/ஆடம் மில்னே, முகேஷ் சௌத்ரி.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா (C), இஷான் கிஷன் (WK), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், பாபியன் ஆலன், ரிலே மெரிடித்/மில்ஸ், ஜெய்தேவ் உனட்கட், முருகன் அஸ்வின், ஜஸ்பிரிட் பும்ரா

- இளவரசன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.