close
Choose your channels
anabel
friendship

தமிழ் சினிமாவின் உயிர்நாடி… இயக்குநர் சிகரம் பற்றி மறக்கவே முடியாத சுவாரசியங்கள்!

Friday, July 9, 2021 • தமிழ் Comments

புராணம், வரலாறு என்றிருந்த தமிழ் சினிமா வடிவத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றியவர், பெரிய நட்சத்திரங்களை கொண்டாடிக் கொண்டு இருந்த சமயத்தில் ரஜினி, கமல், பிரகாஷ்ராஜ், விவேக் எனப் புது பிம்பங்களை சினிமாவில் கட்டமைத்தவர், ஏன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானையும் அறிமுகப்படுத்தியவர், புதுமை பேசும் படைப்புக்குச் சொந்தக்காரர், நாடகம், சினிமா, தொலைக்காட்சி என அனைத்து வடிவங்களிலும் தனது புதுமைகளை அசாத்தியமாக புகுத்தியவர் எனப் பல பெருமைக்கு சொந்தகாரரான இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் 91 ஆவது பிறந்த தினம் இன்று.

சிகரம் தொட்ட இயக்குநர் கே.பாலச்சந்திரனை தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அதேபோல தமிழ் சினிமாவும் இவரை கடந்து சென்றிருக்காவிட்டால் என்னவாகி இருக்கும் என்ற பெருத்த சந்தேகமும் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது.

திருவாரூரில் பிறந்து நன்னிலத்தில் ஆசிரியராக பணிபுரிந்த இயக்குநர் சிகரம் முதலில் நாகடங்களில்தான் தனது கவனத்தை செலுத்தி இருந்தார். அந்த நாடக வடிவத்தையும் தனக்கே உரித்த பாணியில் மாற்றிக் காட்டியவர். பின்னாட்களில் அது சினிமா வரையிலும் தொடர்ந்தது. இதனால்தான் தமிழ் சினிமா பெண் விடுதலை, பெண்ணிய புரட்சி, உறவுச்சிக்கல் எனப் பல புது விஷயங்களையும் பேசத்துவங்கி இருந்தது.

முதலில் “தெய்வத்தாய்“ திரைப்படத்திற்கு வசனம் எழுதி இருந்தார். இது பெரிய அளவில் வரவேற்பை பெற்றதால் அடுத்து “சர்வர் சுந்தரம்“ படத்திற்கு கதாசிரியராகவும் வளர்ச்சி பெற்றார். அப்படியே “நீர்க்குமிழி” திரைப்படத்திற்கு வசனம் எழுதி அதுநாள் வரை தமிழ் ரசிகர்கள் பார்த்து வந்த ஒட்டுமொத்த நம்பிக்கைகளையும் சுக்குநூறாக உடைத்து எறிந்தார்.

இப்படி கதை, வசனம், சினிமா பாணி, நடிப்பு என அனைத்திலும் புதுமையை காட்டியவர் பின்பு கதைக் களத்திலும் மாற்றங்களை புகுத்தினார். புராணம், தெய்வம் பற்றிய பேசியதெல்லாம் போதும் என நினைத்த இயக்குநர் சிகரம், மனித உறவுகளை முதல் முதலில் தமிழ் சினிமாவில் கதைக்களமாக மாற்றி இருந்தார். இதனால் அன்றைய சமூக பிரச்சனைகள் சினிமாவாக எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அந்த அடிப்படையில் “எதிர்நீச்சல்“, “மேஜர் சந்திரகாந்த்“, “நாணல்“, “வறுமையின் நிறம் சிவப்பு“ எனப் பல அழுத்தமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து ரசிகர்களை திக்கு முக்காடச் செய்வதர். அழுத்தமான படைப்பு மட்டுமல்ல தன்னால் நகைச்சுவை படங்களையும் எடுக்க முடியும் எனக் காட்ட விரும்பிய அவர் “பூவா தலையா”, “தில்லுமுல்லு” போன்ற படங்களையும் தமிழ் சினிமாவிற்கு அர்ப்பணித்து இருந்தார்.

அதுவரை படத்தின் விளம்பரத்தைப் பார்த்து விட்டு சினிமா பார்க்க சென்ற ரசிகர்களை, இந்தப் படத்தில் என்னதான் இருக்கும் என்ற ஒருவித எதிர்ப்பார்ப்போடு திரையரங்கு பக்கம் கூட்டிச் சென்றவர் இயக்குநர் கே.பாலச்சந்தர். காமெடி முதல் ஆக்ஷன் வரை அனைத்து பரிமாணங்களிலும் தனது படைப்புகளை மிக எளிமையாக வெளிப்படுத்தியவர்.

நடிகர் சிவாஜி நடித்த “எதிரொலி” திரைப்படம் தோல்வி அடைந்ததால், அடுத்த தலைமுறை கலைஞர்களுக்காக சினிமாத்துறையில் இடம்பிடித்து கொடுத்தவர். இவரது “அபூர்வராகங்கள்” திரைப்படத்தில் அறிமுகமான ரஜினி “தில்லுமுல்லு” என்ற காமெடி திரைப்படம் வரை அனைத்து படங்களிலும் ஜொலித்ததை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. இதனால்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இப்போது நான் அனுபவிக்கும் அனைத்து வசதிகளுக்கும் அந்த இயக்குநர் ஆசான்தான் காரணம் என அடிக்கடி புகழாரம் சூட்டுகிறார்.

கே.பாலசந்தருக்கும் நடிகர் கமலுக்கும் சினிமாவைத் தாண்டி தந்தை, மகன் என்ற உறவுநிலை இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ் சினிமாவைத் தவிர பிறமொழி சினிமாக்களிலும் நடிகர் கமலை நட்சத்திரமாக்கி அழகுப் பார்த்தவர் இயக்குநர் கே.பாலச்சந்தர். அதோடு தன்னுடைய தகப்பனோடு நடிக்க வேண்டும் என விரும்பிய நடிகர் கமல் பின்னாட்களில் “உத்தமவில்லன்” திரைப்படத்தில் அதை நிறைவேற்றிக் கொண்டார்.

அரை நூற்றாண்டு தமிழ் சினிமாவிற்கு சொந்தக்காரர், கலைத்துறை வடிவத்திற்கு புது வடிவு கொடுத்தவர், நடைமுறை சினிமாவை எடுத்து ரசிகர்களை மெய்மறக்க செய்தவர், இப்படி இயக்குநர் கே.பாலச்சந்தரின் ஆளுமைகளைச் சொல்லி மாளாது எனும் அளவிற்கு பெரும் பிரம்மாண்டமாக இருந்த அவருக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அதோடு 7 முறை தேசிய விருதுகளையும், 12 ஃபிலிம்பேர் விருதுகளையும் வாங்கிக் குவித்தவர். கூடவே இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் வாங்கி அலங்காரம் செய்து கொண்டவர். தனது வாழ்நாளிலேயே தனது படைப்புகளுக்காகத் தூக்கிக் கொண்டாடப்பட்டவர். இயக்குநர் பிதாமகன் கே.பாலச்சந்தரின் பிறந்த நாளில் அவரது நினைவுகளை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வதில் பெருமை கொள்கின்றனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz