ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு: துணை முதலமைச்சர் ஓபிஎஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அரசியலுக்கு வரவிருப்பதை உறுதி செய்துள்ள நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது ரஜினியின் அரசியல் வருகையால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அதிமுக வாக்குகள் நிலையானது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ’ரஜினி அரசியலுக்கு வருவதை தாங்கள் மனமார வரவேற்பதாகவும் அவரது அரசியல் வருகை நல்வரவாகட்டும்' என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற கோணத்தில் பார்த்தால் வருங்காலத்தில் சூழ்நிலையை பொருத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினி கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.