தமிழகத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு… முதல்வரின் நடவடிக்கையால் சாத்தியம்!!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ள ஹோல்டியா நிறுவனத்தின் அலுவலகத்தை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியின் போது உரையாற்றிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான நடவடிக்கையால் ஒசூரில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து வலிமை அடைந்து வருகின்றன. ஒசூர் பகுதியில் 2,000 க்கும் அதிகமான சிறு, குறு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் முதன்மை தொழில் நகரமாக விளங்கி வருகிறது. ஒசூர் மற்றும் குருபரப்பள்ளி, சூளகிரியில் மேலும் ஒரு சிப்காட் நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. இதனால் சுமார் ஒரு லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறினார்.
மேலும் செய்தியாளர்களிடம் சந்திப்பின்போது பேசிய அமைச்சர் சம்பத், கொரோனா காரணமாக சீனாவை விட்டு வெளியேறும் நிறுவனங்களின் மூலம் தமிழகத்தில் முதலீடுகளை செய்ய தமிழக அரசு பல்வேறு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. டெல், நோக்கியா, மற்றும் ஆட்டோ மொபைல், கனரக வாகன உற்பத்தி நிறுவனங்கள் எனப் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன. இதன்மூலம் தொழில் வளர்ச்சியில் உலக அளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் ரூ.3 லட்சம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 304 தொழில் நிறுவனங்கள் 24% உற்பத்தி செய்து விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுவரையில் 82% தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா சமயத்தில் மட்டும் 55 தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதுவரையில் ரூ.40,304 கோடி முதலீடுகளின் மூலம் 74 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா காலத்திலும் முதலீடுகள் அதிகம் ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் முதலீடுகளை அனுமதித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனால் கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்பை பெறுவதற்கு தொடர்ந்து தமிழக அரசு தொடர்ந்து வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வருவதாகவும் சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.