கொலை செய்வது எப்படி? யூடியூப் பார்த்து 10 ஆம் வகுப்பு சிறுவன் செய்த விபரீதம்!!


Send us your feedback to audioarticles@vaarta.com


தன்னுடன் ஒரே வகுப்பில் படித்துவரும் சக மாணவனுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்வதற்காக யூடியூபில் வீடியோக்களைப் பார்த்து அதன்படி நண்பன் மீது கொலை முயற்சி நடித்திய சிறுவன் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அது சில நேரங்களில் ஆபத்தான செயல்களுக்கும் வழிவகுத்து கொடுத்து விடுவதை சமீபகாலமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் தனது சக வகுப்பு தோழன் மீது கோபம் கொண்ட 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கொலை முயற்சியில் ஈடுபட்டு நண்பனையே கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கான்பூர் மாநிலம் கதம்பூர் பகுதியில் இயங்கிவரும் பள்ளி ஒன்றில் படித்துவரும் 10 வகுப்பு மாணவர் ஒருவர், அதே வகுப்பில் படித்துவரும் மற்றொரு மாணவருடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். காரணம் இருவரும் அதே பள்ளியில் படித்துவரும் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண்ணை பார்த்து பேசக்கூடாது என்று பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவரை கடுமையாக எச்சரித்துள்ளார்.
மேலும் அந்தப் பெண்ணை பார்த்து பேசினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன அந்த சிறுவன் நண்பனை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். மேலும் பல வாரங்களாக கொலை செய்வது எப்படி என்று யூடியூப் வீடியோக்களைத் தேடித் தேடி பார்த்துள்ளார். இதற்காக அவர் தனது உறவினர்களின் செல்போன்களை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பள்ளிக்கு வந்த அந்த சிறுவன், பள்ளியை விட்டு அனைவரும் சென்ற பின்பு மாலை வேளையில் தன்னை மிரட்டிய நண்பனின் கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார். இதனால் அவரது சுவாச குழாயில் 6 இஞ்ச் வரைக்கும் அறுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஒருவழியாக அந்த காயத்தினால் அவருக்கு உயிரிழப்பு ஏற்படாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனிப்படை போலீசார் குற்றம் சாட்டப்பட்ட மாணவரிடம் பல்வேறு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் தன்னை அந்த மாணவர் மிரட்டியதாகவும் முன்னதாக நான் 12 ஆம் வகுப்பு மாணவியை பார்த்து பேசியதற்காக பலமுறை மன்னிப்புக் கேட்டேன். ஆனாலும் அவன் ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவேளை தான் எதுவும் செய்யாமல் இருந்திருந்தால் அந்த மாலை வேளையில் அவருடைய நண்பர்களுடன் வந்து என்னை தாக்கியிருப்பார். அதனால்தான் பயத்தில் நான் இப்படி செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் வெட்டுவதற்காகப் பயன்படுத்திய கத்தியைக் குறித்து கேட்டபோது சந்தையில் இருந்து நீளமான கத்தியை வாங்கிவந்து அதை பையில் மறைத்தபடி பள்ளிக்குள் கொண்டுவந்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியின் நோட்டு புத்தகத்தை ஆய்வு செய்த தனிப்படை போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரின் மீது விருப்பத்துடன் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கொலை செய்வதற்காக யூடியூப் வீடியோக்களை பார்த்து தொடர்பாக செல்போன்களில் இருந்து தரவுகளை சேகரித்து வருகின்றனர்.
இதையடுத்து ஆதார் அட்டையில் மாணவனுக்கு 13 வயது என்று கூறப்பட்டு உள்ளதால் அவர் தற்போது நிலேந்திரா சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பட்டு உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. யூடியூப் பார்த்து சக வகுப்பு தோழனையே கொலை செய்ய முயற்சித்த இந்தச் சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments