வெடிச்சிரிப்புடன் குடியை கெடுக்கும் குடிக்கு கொட்டு வைத்திருக்கும் குடும்ப படம்
பா.இரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் எழுதி இயக்கிய திரைப்படம் பாட்டில் ராதா. குரு சோமசுந்தரம், சஞ்சனா நட்ராஜன் , ஜான் விஜய் , ' ஜமா ' பரி இளவழகன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பாட்டில் ராதா.
டைல்ஸ் பணியை திறமையாக செய்து வரும் கட்டிட தொழிலாளி ராதா மணி என்கிற ' பாட்டில்' ராதா( குரு சோமசுந்தரம்). அவனது மனைவியாக அஞ்சலம் ( சஞ்சனா நட்ராஜன் ) என்னதான் திறமையான தொழிலாளி என்றாலும் குடி அவரது வாழ்க்கையை மொத்தமாக சூன்யம் ஆக்குகிறது. மது போதை என்றால் சாதாரணமான பொதையல்ல போதையில் தூங்கி , விடிந்தவுடன் மதுக்கடைக்கு ஓடும் அளவிலான போதை. இதனால் வாழ்க்கை, வேலை, குடும்பம், ஏன் பேச்சு, நடை முதற்கொண்டு பிறள்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் தன்னால் இவரைத் திருத்த முடியாது என தீர்மானம் எடுத்து மது மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுகிறார் மனைவி அஞ்சலம். பாட்டில் ராதா வாழ்க்கை மாறியதா இல்லையா என்பது மீதிக் கதை.
குடிகாரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். அந்த வகையில் எந்நேரமும் போதையில் இருப்பவரின் சுபாவத்தையும், உடல் மொழியையும் அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார் குரு சோமசந்தரம். எவ்வளவு பிரச்சனை தன்னை சுற்றி நடந்தாலும் எத்தனை ரகளை ஓடினாலும் மனைவியே விட்டுச் சென்றாலும் ஒரு குவாட்டர் அடிப்போமா என கேட்டவுடன் சிரித்து வழிந்த முகத்துடன் செல்லும் இடமெல்லாம் உண்மைக் குடிகாரன் தோற்றான் போ எனலாம். ஆனால் குரு சோமசுந்தரம் நடிப்பு குரு அவர் நடிப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் சஞ்சனா நட்ராஜன் ஒவ்வொரு காட்சியும் கணவனை நினைத்து தவித்து உருகும் போது நம்மையும் கலங்க வைக்கிறார். இறுதி காட்சியில் பேசும் போது அதுவரை கண்கலங்காதவர்கள் கூட அங்கே கலங்கி விடுவர்.
ஜான் விஜய்... இதுவரை எந்த படத்திலும் இல்லாத ஒரு அமைதியான நடிப்பு, மீட்டரில் செட் செய்த பேச்சு , என பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி நமக்கே ஒரு கட்டத்தில் நம் வீட்டில் எவரேனும் குடிமகன் இருந்தால் இவரிடம் கொண்டு போய் விட்டு விடலாமா என தோன்றிவிடும்.
குடி மற்றும் மதுவுக்கு அடிமை இதனால் விளையும் பிரச்சனைகள் என காமெடியான படங்கள் துவங்கி சோகமான படங்கள் என அத்தனையிலும் சொல்லப்படாத ஒரு விஷயம் குடிக்கு அடிமையானவர்கள் நோயாளிகள் என்னும் உண்மை. இந்த கதையில் அதை மிக எளிமையாக எதார்த்தமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குநர். அதுவும் காவல் நிலையத்தில் ஜான் விஜய் ' அவன் ஒரு பேஷன்ட் சார் ' என சொல்லும்போதுதான் மதுவுக்கு அடிமையானவர்களை அரசும் சமூகமும் எப்படி நடத்த வேண்டும் அவர்களை நல்வழிப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாக அந்த காட்சி அமைந்திருக்கும்.
அதேசமயம் மது மறுவாழ்வு மையங்களில் காட்டப்படும் கடுமையும், வன்முறையும் இன்னும் சற்றே குறைத்திருக்கலாம். அந்த மையங்களில் சென்று தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என நினைக்கும் பலருக்கும் சட்டென இந்த வன்முறைதான் மனதில் பதியும்.
மது பிரச்சனையும் மது ஒழிப்பும் தனிமனித பிரச்சனை இல்லை அது ஒரு சமூகத்திற்கான பிரச்சனையாக அணுகி இக்கதையை உருவாக்கிய இயக்குனர் தினகரன் சிவலிங்கத்துக்கு பாராட்டுக்கள். எனினும் பிற்பகுதியில் இருக்கும் ஓவர் டோஸ் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். மேலும் ஒழுங்கற்ற வேலை நேரமும், சக்திக்கு மீறி திணிக்கப்படும் அதீத வேலையும் அதற்கு கொடுக்கப்படும் சொற்ப கூலியும் தான் மன உளைச்சலையும் தொடர்ந்து மதுப்பழக்கத்தையும் உருவாக்குகிறது என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.
ரூபேஷ் சாஜியின் ஒளிப்பதிவு மறுவாழ்வு மையங்கள், மதுபான கடைகள் என சென்னையின் இன்னொரு இருண்ட உலகை மிக அற்புதமாக காட்சி படுத்தியிருக்கிறது. எடிட்டர் சங்கத்தமிழ் சில திரும்ப திரும்ப போதை காட்சிகளை கட் செய்திருக்கலாம். ஷான் ரோல்டன் பின்னணி இசையில் வழி நிறைந்த காட்சிகள் இன்னும் கனமான சூழலை தருகிறது. அந்த பாட்டில் பாட்டிலு பாடல் திரைக்கதை தடை.
மொத்தத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இப்படி குடியால் வாழ்வைத் தொலைத்த ஏதோ ஒரு மனிதன் இருந்திருப்பான், அல்லது இருப்பான் அவர்கள் யார் என தெளிவாக உணர்த்தியது போல் அவர்களை நல்வழிப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்கிற வழியையும் தெளிவாக மிக்ஸ் செய்திருந்தால் மிக அழுத்தமான சமூக படமாகவே இடம் பிடித்திருக்கும் இந்த பாட்டில் ராதா.
Rating: 3.25 / 5.0
Showcase your talent to millions!!
தமிழ் Movie Reviews






Comments