நாளை வருகிறேன், தயாராக இருங்கள்: பிக்பாஸ் தர்ஷன் வீடியோ!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்த போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷன் கடைசி நேரத்தில் திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் தர்ஷன் வெளியேறியதை அறிந்து பலர் கண்ணீர் வடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை சுட்டிக்காட்டிய தர்ஷன், ’என் மேல் இவ்வளவு அன்பா? என ஆச்சரியப்பட்டதாகவும் ஒரு போட்டியாளர் வெளியேறும்போது வருத்தப்படுவது என்பது சகஜம் தான், ஆனால் கண்ணீர் விடுவது என்பது மிகவும் அரிதாக நடப்பது என்றும் அந்த அளவுக்கு என் மேல் அன்பு வைத்துள்ள மக்களுக்கு நன்றி என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் முகின் மலேசியாவிற்கும், லாஸ்லியா இலங்கைக்கும் திரும்பி விட்ட நிலையில் தர்ஷன் மட்டும் கடந்த சில நாட்களாகவே சென்னையிலேயே இருந்தார். இதனையடுத்து தர்ஷனின் இலங்கை ரசிகர்கள் அவர் எப்போது இலங்கைக்கு வருவார்? என சமூக வலைதளங்கள் மூலம் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதனைஅடுத்து தற்போது தர்ஷன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒரு சில பணிகள் காரணமாக சென்னையில் தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும், தற்போது அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால் நாளை இலங்கைக்கு வரவிருப்பதாகவும் அனைவரும் தயாராக இருங்கள் என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் தர்ஷன் நடிக்க உள்ளார் என்பதும் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் அவர் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.