போராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்பவர்கள் கோமாளிகள்: தமிழ் ஹீரோ ஆவேசம்!
போராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்று சொல்பவர்கள் கோமாளிகள் என்றும் அவர்களை புறக்கணியுங்கள் என்றும் தமிழ் ஹீரோ ஒருவர் ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களாக மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது
இந்த நிலையில் நேற்று டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது, விவசாயிகளின் டிராக்டர் பேரணி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த டிராக்டர் பேரணியில் ஒரு சில இடங்களில் வன்முறை நிகழ்ந்ததாகவும் இதனையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும் இதில் விவசாயிகள் மற்றும் காவல்துறையினர் சிலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் மற்றும் டெல்லியில் நடந்த தடியடி குறித்து தமிழ் நடிகர் சித்தார்த் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: எப்போதும் போராட்டத்தை வன்முறையுடன் சமன் செய்கின்றனர். பாசிசம், ஒற்றை கொள்கை, வெறுப்பு அரசியல், ஏழைகள் மீதான வெறுப்பால் கீழ் நோக்கி செல்கிறோம். போராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்று சில கோமாளிகள் சொல்வார்கள். அவர்கள் புறக்கணியுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த்தின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது