கோலிவுட் திரையுலகின் 80 மற்றும் 90களின் கனவு நாயகிகள். பாகம் 1

80s Actress


இந்த நிலையில் ஏற்கனவே கடந்த 80களில் கனவு நாயகிகளாக இருந்த பத்து நடிகைகள் குறித்து பார்த்தோம். தற்போது மேலும் சில நடிகைகள் 90களில் இளைஞர்களின் கனவு நாயகிகளாக இருந்த நடிகைகள் குறித்து தற்போது பார்ப்போம்

குஷ்பு:

Kushboo

கோலிவுட் திரையுலகில் குஷ்பு அளவுக்கு வேறு எந்த நடிகைக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருந்திருப்பார்களா? என்பது சந்தேகமே. குஷ்புவுக்கு மதுரை ரசிகர்கள் கோவில் கட்டுமளவுக்கு அவரது புகழ் ஓங்கியிருந்தது. ரஜினிகாந்த், பிரபு நடித்த 'தர்மத்தின் தலைவன்' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான குஷ்பு ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், கார்த்திக், ராமராஜன், பாண்டியராஜன், அர்ஜூன், சரத்குமார், என பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடித்த வருஷம் 16, வெற்றி விழா, நடிகன், அண்ணாமலை, மன்னன், நாட்டாமை, போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.

ராதிகா:

Radhika

இயக்குனர் இமயம் பாரதிராஜா கண்டுபிடித்த முதல் ஆர்.நடிகை இவர்தான். கிழக்கே போகும் ரயில் படத்தில் ஆரம்பித்த இவரது திரையுலக பயணம் இன்று வரை நிற்காமல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்று கொண்டிருப்பது ஆச்சரியத்தக்க ஒன்று. நாயகி முதல் அக்கா, அம்மா, என குணசித்திர கேரக்டர் வரை இவர் ஏற்று நடிக்காத கேரக்டர்களே இல்லை என்று கூறலாம். சிவாஜிகணேசன், கமல், ரஜினி முதல் இன்றைய முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா உள்பட மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு.

பானுப்ரியா:

Bhanupriya

கடந்த 1983ஆம் ஆண்டு 'மெல்ல பேசுங்கள்' என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமானாலும் அதன் பின்னர் தெலுங்கு திரையுலகில் சுமார் ஐந்து வருடங்கள் கொடிகட்டி பறந்தார். இந்த காலகட்டத்தில் தமிழ் இயக்குனர்கள் பானுப்ரியாவை பயன்படுத்தாத நிலையில் மீண்டும் தமிழுக்கு இவரை அழைத்து வந்த பெருமை பாக்யராஜ் அவர்களுக்கு உண்டு. அவர் இயக்கிய 'ஆராரோ ஆரிராரோ' படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி ஆன பானுப்ரியா அதன் பின்னர் கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், சிவகுமார்,அர்ஜூன், என முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ்த்திரையுலகில் ஒரு ரவுண்ட் வந்தார்

அமலா:

Amala

சகலகலாவல்லவன் டி.ராஜேந்தரின் 'மைதிலி என்னை காதலி' படத்தில் அறிமுகமான அமலா, அந்த படத்தின் வெற்றியை அடுத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக சில காலம் இருந்தார். ரஜினியுடன் வேலைக்காரன், கொடி பறக்குது, மாப்பிள்ளை போன்ற படங்களுடனும், கமல்ஹாசனுடன் வெற்றிவிழா, சத்யா, பேசும்படம் போன்ற படங்களிலும் நடித்தார். மேலும் விஜயகாந்த், பிரபு, மோகன், சத்யராஜ், சிவகுமார், மம்முட்டி, போன்ற பல நாயகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்

ஊர்வசி:

Urvashi

தமிழ் திரையுலகின் மிகத்திறமையான நடிகைகளில் ஒருவர் ஊர்வசி. காமெடி கலந்த கதாநாயகி அனேகமாக இவர் ஒருவராகத்தான் இருப்பார். இவருக்கு இயல்பாகவே காமெடி சென்ஸ் அதிகம் என்பதும் ஒரு பிளஸ். கே.பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமாகி இவர் நடித்த அந்த ஒரு நிமிடம், பாட்டி சொல்லை தட்டாதே, மைக்கேல் மதனகாமராஜன், மகளிர் மட்டும், போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்

சில்க் ஸ்மிதா:

SilkSmitha

கோலிவுட் திரையுலகம் மறக்க முடியாத ஒரு நடிகை என்றால் அது சில்க்ஸ்மிதா மட்டுமே .80களிலும் 90களிலும் இவரது நடனம் இல்லாத படம் வெளியாவது மிக அரிது. வண்டிச்சக்கரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சில்க் ஸ்மிதா அதன் பின்னர் அலைகள் ஓய்வதில்லை, மூன்றாம் பிறை, சகலகலாவல்லவன், உள்பட பல படங்களில் முக்கிய கேரக்டர்களிலும், ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் நடித்துள்ளார். திரையுலகின் உச்சியில் இருந்தபோது மன அழுத்தம் காரணமாக கடந்த 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இந்தியில் டர்ட்டி பிக்சர்ஸ், கன்னடத்தில் டர்ட்டி பிக்சர்ஸ், மலையாளத்தில் கிளைமாக்ஸ் போன்ற டைட்டில்களில் படம் வெளிவந்தது, இந்தி டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

கவுதமி:

Gauthami

80களின் இறுதியிலும், 90களிலும் புகழ்பெற்று விளங்கிய நடிகைகளில் ஒருவர் கவுதமி. தமிழில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'குருசிஷ்யன்' படத்தில் நடித்த கவுதமி அதன் பின்னர் கமல், ரஜினி, சத்யராஜ், பிரபு, விஜயகாந்த், உள்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். இவர் நடித்த குருசிஷ்யன், அபூர்வ சகோதரர்கள், பணக்காரன், தர்மதுரை, ருத்ரா, தேவர் மகன், செந்தூரப்பாண்டி, குருதிப்புனல், போன்ற பல வெற்றி படங்கள் சூப்பர் ஹிட் ஆனவை. 1988ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை மணந்த கவுதமி ஒரே வருடத்தில் கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். பின்னர் கமல்ஹாசனுடன் சிலகாலம் வாழ்ந்த கவுதமி தற்போது சென்சார் போர்டு உறுப்பினர்களில் ஒருவராக உள்ளார். சமீபத்தில் இவர் கமல்ஹாசனுடன் நடித்த 'பாபநாசம்' திரைப்படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது

ரோஜா:

Roja

ஆர்.கே.செல்வமணி இயக்கிய 'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ரோஜா, ரஜினியின் ராசியான ஜோடிகளில் ஒருவர். ரஜினியுடன் அவர் நடித்த உழைப்பாளி, வீரா ஆகிய இரண்டு படங்களும் நல்ல ஹிட். மேலும் இவர் நடித்த இந்து, மக்களாட்சி, அரசியல், உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராஜசேகர், நாகேஷ்வரராவ், நாகார்ஜூனா, மோகன்பாபு, கிருஷ்ணா, உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தன்னை திரையுலகில் அறிமுகம் செய்த ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்த நடிகை ரோஜா தற்போது ஆந்திர அரசியலில் பிசியாக உள்ளார்,.

மீனா:

Meena

குழந்தை நட்சத்திரமாக கடந்த 1982ஆம் ஆண்டு முதல் நடித்த மீனா கதாநாயகியாக 'ஒரு புதிய கதை' படத்தில் அறிமுகமானார். எனினும் இவருக்கு புகழ் பெற்று தந்த படம் ராஜ்கிரணின் 'என் ராசாவின் மனசில'. ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் நடித்த மீனா பின்னர் அவருக்கே ஜோடியாக 'எஜமான்', 'வீரா', முத்து, போன்ற படங்களில் நடித்தார். கமலுடன் 'அவ்வை சண்முகி, அஜித்துடன் 'சிட்டிசன், வில்லன், ஆனந்த பூங்காற்றே போன்ற படங்களில் நடித்தார். மேலும் இவர் நடித்த குறிப்பிட்ட படங்களாக நாட்டாமை, தாய்மாமன், சேதுபதி ஐபிஎஸ், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, செங்கோட்டை, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, குசேலன் போன்ற பல படங்களில் நடித்தார்.

நக்மா:

Nagma

கடந்த 90களின் முக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர். தெலுங்கு, இந்தி திரையுலகில் கொடி கட்டி பறந்த நக்மாவை தமிழுக்கு அழைத்து வந்தவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். 'காதலன்' படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த நக்மா, அந்த படம் தந்த வெற்றியால் அதன் பின்னர் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான 'பாட்சா'வில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். பின்னர் சரத்குமாரின் ரகசிய போலீஸ், சத்யராஜின் 'வில்லாதி வில்லன், 'கார்த்திக்கின் ;மேட்டுக்குடி', பிரபுவுடன் 'பெரிய தம்பி, உள்பட பல படங்களில் நடித்தார். ஜோதிகாவின் மூத்த சகோதரையான இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றி வருகிறார்.

தேவயானி:

Dhevayani

90களின் பிரபல நடிகைகளில் ஒருவராகிய தேவயானி தமிழில் 'தொட்டாச்சிணுங்கி' என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் அஜித்துடன் இவர் நடித்த 'காதல் கோட்டை' இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. விஜய்யுடன் 'நினைத்தேன் வந்தாய், 'பிரெண்ட்ஸ், சரத்குமாருடன் 'சூர்ய வம்சம், மூவேந்தர், மம்முட்டியுடன் 'மறுமலர்ச்சி, விஜயகாந்துடன் 'வல்லரசு, போன்ற படங்கள் தேவயானியின் குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும். இயக்குனர் ராஜகுமாரன் இயக்கிய 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு பின்னர் அவருடன் 2001ஆம் ஆண்டு திருமணமும் நடந்தது சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் புகழ்பெற்று விளங்கியவர் தேவயானி. கோலங்கள், மஞ்சள் மகிமை, முத்தாரம் ஆகிய தொடர்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

கோலிவுட் திரையுலகின் 80 மற்றும் 90களின் கனவு நாயகிகள். பாகம் 1