close
Choose your channels

1800 ஆண்டு கால தங்கப் புதையல், மறக்கடிக்கப்பட்ட வரலாறு – கோலார் KGF

Friday, February 21, 2020 • தமிழ் Comments

"பூமியை உள்ளே பிளந்து கொண்டு கீழே போனால் பிணம்; மேலே வந்தால் பணம்" இதுதான் கோலார் தங்கவயல் பகுதியில் இன்றைக்கும் உலவிக் கொண்டு இருக்கும் ஒரு பழமொழி. 1800 ஆண்டு காலமாக தங்கத்தை மட்டுமே வாரிக் கொடுத்துக் கொண்டிருக்கும் கோலாரில் ஏன் இந்த மாதிரியான ஒரு பழமொழி வழக்கில் இருக்கிறது என்றால் அதுதான் கொடுமை. மண்ணில் அத்தனை தங்கம் கொட்டிக் கிடந்தாலும் அதை நம்பியிருக்கிற மக்களை வாழ வைக்காமல் வெறுமனே புதைந்து கிடப்பது உண்மையில் ஒரு மாபெரும் வரலாற்று பிழை. இந்த வரலாற்றுப் பிழைக்கு பின்னால் பல லட்சக் கணக்கான மக்கள் தங்களின் வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர் என்பதைத் தான் இப்போது முதலில் பேச வேண்டியிருக்கிறது.

தங்கத்தின் இறக்குமதிக்கு இரண்டு மடங்காக வரிக்கட்டிக் கொண்டு இருக்கும் இதே இந்தியாவின் கர்நாடகாவை அடுத்த கோலார் பகுதியில் இன்றைக்கும் டன் கணக்காக தங்கம் மண்ணில் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஏன் அது தூங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் குறித்து நீண்ட காலமாக கேள்வியும் எழுப்பப் பட்டு வருகிறது.  கர்நாடகத்தின் ஒவ்வொரு மாநில சட்ட மன்றத் தேர்தலின் போதும் சுரங்கத்தை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் படும் என வாக்குறுதி கொடுக்கப் படுகிறது. ஆனால் வாக்குறுதி தொடர்ந்து காற்றோடு காற்றாக கரைந்து போகும் நிலைமையில் இதன் பின்னணியைக் குறித்து தெரிந்து கொள்வது உண்மையில் அவசியமான ஒன்று.

கோலார் - நம்பியிருந்த மக்களின் வாழ்வாதாரத்தை காலி செய்திருக்கிறது; பிரிட்டிஷ்க்கு மட்டும் வாரி வழங்கிவிட்டு இந்திய மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது; உற்பத்தி குறைவு எனக் காரணம் காட்டி திடீரென்று தனது மூடு விழாவினையும் நடத்திக் கொண்டு இருக்கிறது இப்படித்தான் கோலார் தங்க வயலைக் குறித்து அங்கிருக்கும் மக்கள் வேதனை படுகின்றனர். சரி அதன் வரலாற்றுத் தொடக்கத்திற்கு போய் பார்ப்போம்.

உண்மையில், கோலாரில் முதலில் எப்போது தங்கம் வெட்டி எடுக்கப் பட்டது? என்ற கேள்வி  கி.பி. 77 க்கு நம்மைக் கூட்டிச் செல்கிறது. ரோமானிய பயணி பிளைனி தனது பயணக் குறிப்பில் கோலார் தங்க வயலில் தங்கம் எடுக்கப் பட்டதைக் குறித்து குறிப்பிட்டு இருக்கிறார். அந்தக் காலக் கட்டத்தில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்ற தங்கத்தோடு கோலார் தங்கம் பொருந்தி போகிறது என்பது தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கோலார் தங்கம் ஹரப்பா, மொகஞ்சதாரோ தங்கத்தை ஒத்திருக்கிறது என்பதும் இதன் பெருமைக்கு பலம் சேர்க்கிறது எனலாம்.

சோழர்கள், நாயக்கர்கள், விஜயநகர பேரரசு, முகலாயர்கள் எனப் பல்வேறு அரசுகள் தங்களின் ஆட்சிக் காலத்தில் கோலார் பகுதியில் தங்கத்தை வெட்டி எடுத்திருக்கின்றனர். ஆனால் பெரிய அளவிற்கான தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியை திப்பு சுல்தான் தான் முதலில் தொடங்கி வைத்திருக்கிறார். தனது ஆட்சிக் காலத்தில் பெரும்பாலான மனித உழைப்பை கோலார் பகுதிகளில் கொட்டி இரைத்து திப்பு சுல்தான் ஆரம்பித்த முயற்சி பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கைகளுக்கு போனது தான் பெரும் கொடுமை.

கோலார் உலகிலேயே மிகவும் ஆழமான 3196 அடி தங்கச்சுரங்கம். இந்தியாவில் இரண்டாவதாக மின்சாரம் வழங்கப் பட்ட இடம். இப்படி இதன் பெருமையை பறைச்சாற்றிக் கொண்டே போகலாம். பிரதமர் நேரு தனது ஆட்சி காலத்தில் கடுமையான பொருளாதார சரிவினை சந்தித்த போது உலக வங்கியிடம் கடன் கேட்டிருக்கிறார். தர மறுத்த உலக வங்கியிடம் என்னிடம் கோலார் தங்க வயல் இருக்கிறது, இப்போது கொடுக்க முடியுமா? என கோலார் வயலைக் காரணம் காட்டி கடன் வாங்கியிருக்கிறார். ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே சரி செய்யும் அளவிற்கு மிகவும் வலிமை வாய்ந்த இந்த கோலார் தங்கச் சுரங்கம் தற்போது இருக்கிற இடம் தெரியாமல் சினிமா சூட்டிங்குகள் நடைபெற்று வரும் கொடுமையை என்ன வென்று சொல்லவது?

பிரிட்டிஷ் கைகளில் கோலார்

1800 வாக்கில் ஆங்கில அரசு தங்களது ஆட்சிப் பகுதியில் வரி வசூலை முறைப் படுத்துவதற்கு நில அளவீட்டு முறைகளில் ஈடுபட்டது. அப்படி கர்நாடகாவில் நில அளவையில் ஈடுபட்ட ஆங்கில அதிகாரி ஜான் வோரனின் காதுகளுக்கு அந்தத் தங்கச் செய்தி முதன் முதலாக வந்து சேர்கிறது. இதை மற்ற அதிகாரிகளின் காதுகளுக்கும் கொண்டு சேர்க்கிறார் வோரன்.

கோலார் பகுதிகளில் உள்ள தங்கத்தை வெட்டியெடுக்க மக்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர் என்ற தகவல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு குதூகலத்தை ஏற்படுத்துகிறது. பின்பு தங்கத்தின் மீது தீராத ஆர்வம் கொண்ட வோரன் கோலாரில் 2 வருடங்கள் தங்கி ஒரு ஆய்வுக் கட்டுரையையும் எழுதுகிறார். அதை நம்பி பிரிட்டிஷ் அரசு தங்கம் தோண்டும் முயற்சியில் இறங்குகிறது. ஆனால் லாபத்தை ஈட்ட முடியாமல் போகவே அதைக் கை விடவும் செய்கிறது.

சுமார் 60 வருடங்களுக்குப் பின்பு, வோரனின் கட்டுரையை படித்த பிரிட்டிஷ் சிப்பாயான லவேல் 1871 இல் இந்தியாவிற்கு வந்து சேருகிறார்.  கர்நாடக சமஸ்தானத்திடம் கோலார் மண்ணில் நிலக்கரி, மக்னீசியம் இருக்கிறது, அதை வெட்டி எடுத்து விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு பொய்யாக நாடகமாடுகிறார். உண்மையை அறியாத மைசூர் சமஸ்தானம் அனுமதியும் வழங்குகிறது. குறைந்த நாட்களிலேயே லவேலின் உள்நோக்கம் தெரிய வர, மைசூர் சமஸ்தானம் கோலார் பகுதியில் தோண்டும் பணியை தடை செய்கிறது.

கொஞ்சம் காலத்திற்கு பின்பு, தோண்டி எடுக்கப் படும் தங்கத்தில் 10% சமஸ்தானத்துக்கு கொடுத்து விடுவது என்ற ஒப்புதலுடன் லவேலுக்கு தங்கத்தை வெட்டி எடுக்க அனுமதி கிடைக்கிறது. இப்படி கோலார் தங்க வயல் மீது பிரிட்டிஷ்க்கு கிடைக்கிற ஆதிக்கம் 10 கம்பெனிகளின் கைகளுக்கு படிப் படியாக மாற்றப் படுகிறது. காரணம் எந்த ஒரு கம்பெனியாலும் கோலாரில் எதிர்பார்த்த அளவிற்கு தங்கத்தை வெட்டி எடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

இறுதியாக ஒரு பிரிட்டிஷ் கம்பெனி கோலாரின் தங்கத்தை வெட்டி எடுத்து விடுவது என்ற முடிவுடன் இங்கிலாந்தில் இருந்து படையெடுத்து வருகிறது. அந்த நிறுவனத்தின் பெயர் ஜான் டெய்லர் & சன்ஸ்.

அதுவரை பல நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளைச் செய்தும் எந்த லாபத்தையும் சம்பாதிக்க முடியாத நிலையில் டெய்லர் மிகுந்த நம்பிக்கையுடன் புதிதாக இயந்திரங்களை வரவழைத்து மண்ணை தோண்ட ஆரம்பிக்கிறார். முதலில் 6 அடிக்குத் தோண்டிய உடனேயே நீர் பிய்த்துக் கொண்டு வந்ததை பார்த்து டெய்லர் பயந்து போகிறார். இந்த நிலைமையை எப்படி கையாள்வது என்று தெரியாமல் இங்கிலாந்தில் இருந்த சுரங்க பொறியியல் வல்லுநரான ப்ளம்மரை உதவிக்கு அழைக்கிறார்.

உடனே இந்தியாவிற்கு வந்த ப்ளம்மர், கோலார் வயலை சுற்றிப் பார்த்து ஒரு பழைய சுரங்க வழியைக் கண்டு பிடிக்கிறார். பழைய வழியை பயன்படுத்த பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்புகின்றன. அதையும் தாண்டி அந்தப் பாதையில் தொழிலாளர்கள் இறக்கப் படுகின்றனர். சில நூறு அடி தூரத்திற்கு சென்ற தொழிலாளர்கள் முதல் முறையாக சில நூறு கிலோ அளவிற்கு தங்கப் படிமங்களை எடுத்துக் கொண்டு மேலே வருகின்றனர். இந்த முதல் பயணம் கோலார் தொழிலாளர்களை மட்டுமல்ல இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

கோலாரின் பரப்பளவு மிகவும் அதிகம் என்பதாலும் அதில் நிறைய தண்ணீர் நீரோட்டங்கள் இருப்பதாலும் தொழிலாளர்களின் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே 6000 தொழிலாளர்களை இங்கிலாந்தில் இருந்து வர வழைக்க முயற்சி செய்கிறார் டெய்லர். ஆனால் இங்கிலாந்து தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, உறுதியான வீடு, தண்ணீர் வசதி, விளையாட்டு அரங்கம் என ஒரு நீண்ட பட்டியலை  நீட்டியதும் மிரண்டு போகிறார் டெய்லர்.

அந்நாட்களில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சாதி கொடுமை தாண்டவம் ஆடிய காலக் கட்டம். கர்நாடகத்தை ஒட்டிய வட ஆர்காடு, தர்மபுரி, சித்தூர் போன்ற பகுதிகளில் ஒடுக்கப் பட்ட சாதி மக்களையும் வளர்ந்து வரும் பாட்டாளி இனத்தவர்களையும் இந்த கோலார் தங்க வயலில் ஈடுபடுத்த நினைக்கிறார் டெய்லர்.

ஏற்பாடுகள் அசுர வேகத்தில் முடுக்கி விடப்படுகின்றன. 3 லட்சம் தமிழர்கள் கோலார் தங்க வயலை ஒட்டி வீடுகளைக் கட்டிக் கொண்டு தங்க ஆரம்பிக்கின்றனர். அதே நேரத்தில் இன்னொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயமும் நடக்கிறது. காவேரி மின் தயாரிப்பு மையம் இந்த கோலார் வயலுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து தர முன்வருகிறது. இந்தியாவில் மின்சாரம் பெறும் நகரங்களில் கோலார் இரண்டாவது நகரம் என்பதும் குறிப்பிடத் தக்கது.  அதோடு புதுமையான இயந்திரங்களும் இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப் படுகின்றன.

இதுவரை ஏர் கலப்பைகளை பிடித்துக் கொண்டு சேற்றில் வாழ்ந்த ஒரு பாட்டாளி வர்க்கம் தங்கச் சுரங்கத்தின் பாதாளத்தில் ஏறி இறங்க பழகிக் கொள்கிறது. சாதியடிப்படையில் விளிம்பு நிலைக்கு தள்ளப் பட்ட ஒரு கூட்டத்திற்கு இந்த கோலார் சமூக அந்தஸ்தையும் பெற்று தருகிறது. இப்படி தொடங்கப் பட்ட வாழ்க்கை பின்னாட்களில் படு குழிக்குத் தள்ளப்படும் என்பதை அப்போது ஒருவரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

கோலாரில் தங்கம் வெட்டி எடுக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து சுமார் 120 ஆண்டுகளாக 800 டன் தங்கத்தை வெட்டி எடுக்கிறார் டெய்லர். அனைத்துப் பொருளாதாரமும் இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப் படுகிறது. அவ்வபோது சுரங்கத்தின் பராமரிப்புகளுக்கும் கொஞ்சம் நிதி ஒதுக்கப் படுகிறது என்பது மட்டுமே டெய்லர் காட்டும் கரிசனமாக இருக்கிறது.

இந்தியாவில் 1956 வரை டெய்லர் எந்த சிக்கலும் இல்லாமல் தங்கத்தை வெட்டி குவிக்கிறார். இந்திய விடுதலைக்குப் பின்னர் தனது கூடாரத்தைக்  காலி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் வரவும் மைசூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறார் டெய்லர். ஆனால் மைசூர் அரசு பிரிட்டிஷ்க்கு நன்றியைக் காட்ட வேண்டும் என்று தானாகவே நிர்வாக பொறுப்புகளை டெய்லரின் அதிகாரிகளுக்கு வழங்குகிறது. இப்படி கிடைத்த அதிகாரத்தை வைத்துக் கொண்ட டெய்லர் நிறுவனம் 1971 வரை தனது ஆதிக்கத்தை கோலாரில் செலுத்தியது என்பதே உண்மை வரலாறு.

1956 க்கு பிறகு மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கோலார் தங்கச் சுரங்கம் கொண்டு வரப்படுகிறது. மத்திய எஃகு தொழிற்சாலை, பின்பு பாரத் தங்கச் சுரங்கம் என இதன் நிர்வாகத்தை மாற்றி மாற்றி மத்திய அரசு கையில் எடுக்கிறது.

1956 இல் இருந்து 1962 ஆம் ஆண்டு வரை சுமார் 20 கோடி மதிப்பிலான தங்கம் வெட்டி எடுக்கப் பட்டதாக மத்திய அரசு கணக்கு காட்டுகிறது. ஆனால் இதற்கு நடுவில் கோலார் தங்கச் சுரங்கத்தின் எந்த ஒரு பராமரிப்பு நடவடிக்கையும் மேற்கோள்ளப் படவில்லை, அதோடு பழைய இயந்திரங்கள் புதிதாக மாற்றப் படவும் இல்லை. தங்கத்தை வெட்டி யெடுக்கும் முறைகளில் எந்த மாற்றமும் செய்யப் படவில்லை. சுரங்கத்தின் அடியில் இருக்கும் அணை பகுதிகளை இன்னும் உறுதியாக அமைப்பதற்கு எந்த ஒரு திட்டமும் இந்த நிர்வாகத்திடம் இல்லை.

அதே போல ஜான் டெய்லர் நீர் தடுப்புகளைத் தாண்டி பல இடங்களில் சுரங்கத்திற்குள் முத்திரையிட்டு வழிகளை அடைத்து வைக்கிறார். எந்த காரணத்திற்காக இந்த இடங்கள் மூடப்படுகின்றன என்பதைக் குறித்தும் மத்திய அரசு கேள்வி எழுப்பவில்லை என்பதே கொடுமையிலும் கொடுமை. ஜான் டெய்லர் வைத்திருந்த திட்ட வரைவுகளில் பெரும்பாலும் எந்த ஒரு விஞ்ஞான அறிவியலும் இல்லை என்பதுதான் உண்மை. ஆதிகாலத்தில் உருவாக்கப் பட்ட அதே வரைவுத் திட்டத்தை வைத்துக் கொண்டே பின்னாட்களிலும் இந்திய அரசு சுரங்கத் தொழிலை மேற்கொண்டது. இதை எந்தவொரு வரலாற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத அடி முட்டாள் தனம் என்றே தற்போது பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கர்நாடகத்தின் மேற்கே 40 கி.மீ. லிருந்து கோலார், குப்பம், தர்மபுரி, வழியாக சேலம் வரை பூமிக்கடியில் தங்கப் படிமம் வேர் போல் படிந்து இருந்ததை ஆங்கிலேயர்களின் ஒரு சர்வே ரிப்போர்ட் குறிப்பிடுகிறது. இந்த சர்வே பரந்த அளவில் பொதுவாக குறிப்பிடப் பட்டு இருந்தது. டெய்லர் நடத்திய இந்த நிலத்தடி சர்வே பழைய முறையில் நடத்தப் பட்ட ஒன்று. அதில் ஓரளவிற்கு மட்டுமே உண்மை தன்மையை எதிர்ப் பார்க்க முடியும்.

இந்த வரைவுத் திட்டத்தை கொண்டு பின்னாட்களில் ஏதேனும் ஒரு அறிவியல் ரீதியிலான சர்வே செய்யப் பட்டு இருந்தால் உண்மை நிலவரம் குறித்து அறிய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால் நமது அரசாங்கம் இதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள வில்லை என்பதே உண்மை. இப்படி எந்த ஒரு திட்டத்தையும், பராமரிப்பையும் செய்யாமல் 1980 இல் இருந்து சுரங்க நிர்வாகம் வெறுமனே, நட்டத்தை மட்டுமே கணக்கு காட்டி இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை.

1994-1996 காலக் கட்டங்களில் விலை மதிப்பு வாய்ந்த கருவிகள் சுரங்கத்தினுள் பயன்படுத்த முடியாத நிலைமை வருகிறது. சுரங்கத்திற்குள் இருக்கும் பல அணைகள் (சிறு சிறு தடுப்பு சுவர்கள்) உடைகின்றன. மோசமான நீர்க் கசிவு சுரங்கம் முழுவதும் வேலை செய்ய முடியாத அளவிற்கு பரவுகிறது. 2500 அடி ஆழத்திற்குள் தொழிலாளர்கள் இறங்கி வேலை பார்க்க முடியாது என சுரங்க நிர்வாகம் படிப்படியாக ஆட் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

தொழிலாளர்களின் மாதாந்திர உற்பத்தி குறைவு, இயந்திரங்களின் செலவு அதிகம் எனச் சுரங்கத் துறை நிர்வாகம் அறிக்கையினை தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறது. சுரங்கத்திற்கு தேவைப்படும் வெடிபொருட்கள் முதலில் நிறுத்தப் படுகின்றன. செயற்கையாக மின்தடையும் கோலார் பகுதியில் நடைமுறைப் படுத்தப் படுகிறது. சுரங்கம், மூடலுக்கான அஸ்திவாரங்கள் எல்லாம் முறையாகத் தயாராகி விட்டது.

இவ்வளவு காலமும் உணர்வு ரீதியாக சுரங்கத்தோடு தொடர்புடைய மக்களின் விழி பிதுங்குகிறது. சுரங்கத் தொழிலை மட்டுமே மூன்று தலைமுறையாக செய்து வந்த மக்கள் எங்கு போவது? என்ன செய்வது? என்று தத்தளிக்க ஆரம்பிக்கின்றனர். பாரத் கோல் மைன்ஸ் தங்கத்தின் இருப்பு குறைவு என்றும் ஒரு அறிக்கையினை தயார் செய்கிறது. 2001, மார்ச் 1 ஆம் தேதி 140 காலமாக தொடர்ந்து தன் வளத்தை வாரி வழங்கிக் கொண்டிருந்த சுரங்க வாயில் மூடப்படுகிறது. 3000 அடிகளுக்கும் மேலாக தன் கைகளாலேயே வெட்டியெடுத்து செப்பனிட்ட தொழிலாளர்கள் சுரங்க வாயிலேயே தடுத்து நிறுத்தப் படுகின்றனர்.

காரணம் என்ன வென்று தெரியாமல், தங்களது தொழிற்சங்கத் தலைவர்களைத் தேடும் தொழிலாளர்கள் தனித்து விடப்படுகின்றனர். வேலை எதுவும் செய்ய தெரியாத 3 லட்சம் தொழிலாளர்கள் பெங்களூருக்கு குடி பெயர்ந்து பெரும்பாலும் சிறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப் படுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பப் பட்ட நிலையில் மத்திய அரசு சுரங்க நிலவரம் குறித்து ஆய்வு செய்ய 3 வேறு வேறு கமிட்டியை உருவாக்குகிறது.  கே.எஸ்.ஆர். சாரி,  சுசீலா, ராமதாஸ் அகர்வால் என்ற மூன்று நபர்களும் கொடுத்த அறிக்கை நகல்கள் வெறுமனே தூசித் தட்ட மட்டுமே பின்னாளில் பயன்படுத்தப் பட்டது. இதில் சாரி கமிட்டி சுரங்க நிர்வாகத்தில் நடந்த ஊழல்களை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டியது.

கோலார் தங்கச் சுரங்கத்தில் வர்த்தக முறையிலான சீர்கேடுகள் நடைபெற்று இருப்பதை சாரி கமிட்டி எடுத்துக் காட்டியதும் பரபரப்பு கிளம்பியது. இந்த சாரி கமிட்டியின் அறிக்கை 1985 – 90 களில் சுரங்கத்தின் நிலவரத்தைக் குறித்து விசாரணை செய்து வெளியிடப் பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. சாரி கமிட்டி வைத்த மிகப் பெரிய குற்றச்சாட்டு கோலார் தங்கச் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப் படுகின்ற தங்கத்தை வெளி நாடுகளில் விற்கப் படாமல் லண்டனில், உலோக ரிசர்வாக இந்தியா பயன்படுத்தியது என்ற உண்மையை போட்டு உடைக்கிறது. இந்தத் தங்கத்தின் அளவை வைத்துதான் இந்தியா தனது பணத்தை அச்சடிக்க ஒரு காரணமாகவும் காட்டி வருகிறது என்ற நிலவரம் உலகத்தின் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

வெளிச் சந்தையில் கொள் முதல் செய்யப் படாதது, பழைய தொழில் நுட்பம், சையனைடு கழிவுகளில் அதிக தங்கம் வெளியேறுகிறது என்ற சாரி கமிட்டியின் குற்றச் சாட்டை சுரங்க நிர்வாகம் எதிர்க கொள்ள முடியாமல் தவிக்கிறது. எனவே மூன்று கமிட்டிகளும் கொடுத்த ஆவணங்கள் அடங்கிய காப்பகம் தீயில் கருகவும் செய்கிறது. இதில் அரசுக்கு சம்மந்தம் இருப்பதாகவும் அப்போது குற்றச் சாட்டு எழுந்தது.

ஒன்றரை நூற்றாண்டு கால தொப்புள் கொடி அறுக்கப் பட்டு பெங்களூரில் வாட்ச் மேன் வேலை செய்து வரும் பல ஆயிரக்கணக்கான மக்கள் அதன் நினைவுகளை இன்னும் நெஞ்சில் சுமந்து கொண்டு ஏக்க பெருமூச்சு  விட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். டன் கணக்கில் தங்கம் இன்றைக்கும் மண்ணில் புதைந்து கிடக்கிறது என்பதை இந்தியாவில் இருக்கும் எந்த ஒருவராலும் எளிதில் கடந்து போக முடியவில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது.

ஆனால் இப்போது வரைக்கும் கர்நாடக அரசியலில் ஒரு பேசு பொருளாக மட்டுமே கோலார் இருந்து வருகிறது. 2016 இல் பிரதமர் மோடி இதன் திறப்புக்காக சில முயற்சிகளையும் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனால் அது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த வில்லை என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

இந்தியாவில் எல்லா பொதுத் துறை நிறுவனத்திற்கும் நடக்கும் கொடுமை இந்தக் கோலாருக்கும் என்று நடையை கட்டி விட்டு பெரும்பாலானவர்கள் கிளம்பி விட்டாலும், சிலரிடம் கோலார் திரும்பவும் திறக்கப் படுமா என்ற எதிர்ப் பார்ப்பும் இருக்கத் தான் செய்கிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz